சேலம்: சேலம்-விருத்தாசலம் பயணிகள் ரயில் இன்று முதல் (23ம் தேதி) தினமும் இருமுறை இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் விருத்தாசலத்திற்கு முன்பதிவில்லா பயணிகள் ரயில் இருமுறை இயக்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு அந்த பயணிகள் ரயில் சேவை தினமும் ஒரு முறை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இதனால் சிரமத்திற்கு உள்ளான பயணிகள், மீண்டும் பழைய முறைப்படி ரயில் சேவையை இரண்டு முறை இயக்க வேண்டும் என்று ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இன்று (23ம் தேதி) முதல் பழைய முறைப்படி சேலம்- விருத்தாசலம் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது. அதன்படி, இன்று பழைய முறைப்படி ரயில் சேவை தொடங்கியது. அதன்படி, சேலம் ரயில் நிலையத்தில், சேலம்-விருத்தாசலம் ரயில் (06896) காலை 10.05 மணிக்கு புறப்பட்டு மார்க்கெட், டவுன், அயோத்தியாப்பட்டணம், மின்னாம்பள்ளி, வாழப்பாடி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், தலைவாசல், சின்னசேலம் வழியாக விருத்தாசலத்திற்கு மதியம் 1.05 மணிக்கு சென்றடைகிறது. இதேபோல், மறுமார்க்கத்தில் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் (06895) இருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு, சேலத்திற்கு மாலை 5.05 மணிக்கு வந்து சேர்கிறது. எனவே, இந்த ரயில் சேவையை பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். சேலம்-விருத்தாசலம் பயணிகள் ரயில் மீண்டும் கூடுதலாக ஒரு சேவை இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….
The post சேலம்-விருத்தாசலம் பயணிகள் ரயில் இன்று முதல் தினமும் இருமுறை இயக்கம் appeared first on Dinakaran.