×

காலை, மாலையில் நெரிசலை கட்டுப்படுத்த இருவழிப்பாதையாகிறது பல்லாவரம் மேம்பாலம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு

தாம்பரம்: சென்னை – தாம்பரம் சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல்லாவரம் மேம்பாலத்தில் காலை மற்றும் மாலையில் இருவழிப்பாதையாக மாற்றுவது குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். சென்னை – தாம்பரம் ஜிஎஸ்டி சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன. இச்சாலையில் காலை, மாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் வேலைக்கு செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, பல்லாவரம், குரோம்பேட்டை போன்ற பகுதிகளில் கூடுதல் நெரிசல் ஏற்படுகிறது. மேலும், பல்லாவரம் பஸ் நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் தற்போது, தாம்பரத்திலிருந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. மறுபுறம், மீனம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் வாகனங்கள் பாலத்தின் கீழ் பகுதியில் செல்கின்றன. இவ்வாறு பாலத்தின் கீழ் பகுதியில் செல்லும் வாகனங்கள் நெரிசலில் சிக்குவதால், மேம்பாலத்தை காலை, மாலை நேரங்களில் இருவழிப்பாதையாக மாற்ற வேண்டும், என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். அதன்பேரில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, மண்டல குழு தலைவர் இ.ஜோசப்அண்ணாதுரை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் சென்று பல்லாவரம் மேம்பாலத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது, போக்குவரத்து நெரிசலுக்கு தற்காலிக தீர்வு காணும் வகையில், காலை மற்றும் மாலை நேரங்களில் மேம்பாலத்தை இருவழிப்பாதையாக மாற்ற நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சென்னையிலிருந்து தாம்பரம் நோக்கி செல்லும் சாலையில் பல்லாவரம் மேம்பால தொடக்கம் அருகே பாதுகாப்பு துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த சாலை மிகவும் குறுகலாக உள்ளதால், காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பகுதி வியாபாரிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் விடுத்த கோரிக்கையின் படி மேம்பாலத்தை இருவழிப்பாதையாக மாற்றுவது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்துள்ளோம். இதில், அடையாறு மேம்பாலம் காலை மற்றும் மாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இருவழிப்பாதையாக செயல்படுவது போல், பல்லாவரம் மேம்பாலத்திலும் செயல்படுத்த ஆய்வு செய்துள்ளோம். பாதுகாப்பு துறையிடமிருந்து, நிலம் கையகப்படுத்தபட்டவுடன் 2 மாதங்களில் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்,’’ என்றார்….

The post காலை, மாலையில் நெரிசலை கட்டுப்படுத்த இருவழிப்பாதையாகிறது பல்லாவரம் மேம்பாலம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,Minister ,T. Moe Andarasan ,DHAMBARUM ,Chennai ,Dhambaram Road ,T. Moe Anbarasan ,
× RELATED பல்லாவரம் அருகே யூடியூப் விளம்பரத்தை...