×

தடுப்பணை மதகுகள் மூடி வைக்கப்பட்டுள்ள அவலம்; கண்ணமங்கலம் நாகநதி ஆற்றில் வீணாகும் மழை வெள்ளம்: நிரந்தர நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் நாகநதி ஆற்றில் வரும் மழை வெள்ளத்தை ஏரிக்கால்வாயில் நிரந்தரமாக திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கண்ணமங்கலம் அருகே ஆயிரம் ஏக்கரில் கொளத்தூர் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு சிங்கிரி கோயில் அருகே நாகநதி ஆற்றின் குறுக்கே 1933ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணையிலிருந்து ஏரிக்கால்வாய் வழியே நீர் வருகிறது. இதன்மூலம் 40க்கும் மேற்பட்ட ஏரிகள் தொடர்ச்சியாக நிரம்புகிறது. இந்த தடுப்பணை இரண்டு வருடங்களுக்கு முன் ₹86 லட்சத்தில் சீரமைக்கப்பட்டது. ஜவ்வாது மலைத்தொடரில் சிறிய அளவில் சாதாரண மழை பெய்தால் கூட நாகநதியில் ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் மழையால் இந்த நதியில் வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஏரிக்கால்வாய்க்கு நீர் செல்லும் மதகுகள் மூடி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல், மேல்வல்லம் அருகே நாகநதி அருகே ₹75 லட்சத்தில் கண்ணமங்கலம் தடுப்பணை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் சீரமைக்கப்பட்டது. தற்போது இதன் மதகுகளும் மூடி வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஏரிக்கால்வாயில் நீர் செல்லாமல் ஆற்றில் வீணாக சென்று கொண்டிருக்கிறது. வருடந்தோறும் இதே நிலை நீடித்து வருகிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் அலட்சிய போக்கே காரணம் என கூறப்படுகிறது.ஏரிகளில் நீர் நிரம்பினால் ஏரி மதகுகளை திறந்து விட்டு நீரை வீணாக வெளியேற்றுவதும், ஏரிக்கால்வாய்க்கு நீர் வராமல் அணைக்கட்டு மதகுகளை மூடி வைப்பதுமாக விவசாயிகளுக்கு எதிர்மாறான செயல்களில் ஈடுபட்டு வருவதும் தொடர்கதையாக உள்ளது. மேலும், ஏரியை ஏலத்துக்கு விட்டு மீன் விற்பனைக்காக ஒப்பந்ததாரர்களுக்கு சாதமாக செயல்படுகின்றனர். எனவே, இனி வரும் காலங்களில் ஏரி மீன் ஏலம் விடுவதை முற்றிலும் தடை செய்தால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும் எனவும், தென் மாவட்டங்களில் நடப்பது போல பொதுவாக மீன் பிடி திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.கால்வாயில் நீர் வரவில்லைதிருவண்ணாமலை மாவட்டத்தில் சில நாட்களாக மழை பெய்து வருகின்றது. கண்ணமங்கலம் பகுதியில் நேற்று காலை மழை பெய்தது. ஆனால், ஏரிக்கால்வாயில் நீர் கால்வாயில் நீர் வரவில்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். அப்போது சிறிது நேரம் மதகுகளை திறந்து போட்டோ எடுத்து, தண்ணீர் வருகிறது என விவசாயிகளுக்கு படத்தை அனுப்பி விட்டு, மீண்டும் மதகுகளை மூடி உள்ளனர். இதனால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்….

The post தடுப்பணை மதகுகள் மூடி வைக்கப்பட்டுள்ள அவலம்; கண்ணமங்கலம் நாகநதி ஆற்றில் வீணாகும் மழை வெள்ளம்: நிரந்தர நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kannamangalam ,Naganadi river ,Dinakaran ,
× RELATED ஆரணி அருகே அத்தியூர் மலையில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது..!!