×

சேலம் விவிஐபிக்கு எம்பி எலக்‌ஷனால ஏற்பட்டுள்ள புது தலைவலி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சேலம் விவிஐபி எப்படி இருக்கிறார் என்று கேட்டார்…’’ பீட்டர் மாமா.‘‘இலைக்கட்சிக்கு கிடைக்கும் 2 மேல்சபை எம்பி பதவிய புடிக்க, மாங்கனி மாவட்ட விவிஐபி மற்றும் தேனிக்காரரோட ரத்தத்தின் ரத்தங்கள் மத்தியில போட்டா போட்டி நடக்குது. இது ஒருபுறம் இருக்க, சமுதாய ரீதியா சேலம்காரருக்கு புது நெருக்கடி வந்துருக்காம். கிரிவலம் மாவட்டத்துல இருந்து வந்த யாதவ சமூகத்த சேர்ந்த சிலரு, சேலம் விவிஐபிய நேரடியா பாத்து, மாநிலங்களவை எம்பி பதவியில ஒன்ன எங்களுக்கு கொடுங்கனு ெவளிப்படையா கேட்டாங்களாம். இலைக்கட்சிய பொறுத்தவரைக்கும் முதல்வர்களாக இருந்தவங்க எல்லோரும், எங்க சமுதாயத்துக்கு முக்கிய பொறுப்பு கொடுத்தாங்க… ஆனா, கடந்த 5 வருசத்துல, நீங்க ஒட்டுமொத்தமா எங்க சமூகத்த புறக்கணிச்சுட்டீங்க, அமைச்சர் பதவி இல்லனாலும், ஒரு ஆவின் தலைவராவது கொடுத்துருக்கலாம்னு கொந்தளிச்சாங்க. மேலும், எங்க சமுதாயத்துல இருக்குற ஒரு கோடி பேரும் இலைகட்சி மேல அதிருப்தியா இருக்கோம். எனவே, இப்போ ஒரு மேல்சபை எம்பியும், அடுத்த வருசம் நடக்குற எம்பி., எலக்‌ஷன்ல 3 எம்பி தொகுதியையும் எங்களுக்கு கொடுங்கனு போர்ஸா விட்டாங்களாம். இதே மாதிரி கட்சியிலயும் அனைத்து மட்டத்துல பொறுப்பு வேணும்னு கேட்டுருக்காங்களாம். இதனால விவிஐபிக்கு புது தலைவலி வந்திருக்காம்… ஆனால், அவர்களுக்கு வேறு வழியில் உதவி செய்வதாக சொல்லியிருக்காராம்… அதை கேட்டது கிரிவலம் மாவட்டத்துல இருந்து வந்த நிர்வாகிங்க அதிருப்தியில போய் இருப்பதுதான் சேலம் விவிஐபிக்கு புது தலைவலியை கொடுத்திருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘குக்கர் வேலை செய்யுதா… அதுல அரிசி போட்டா வேகுமா…’’ என்று சிரித்தபடி கேட்டார்…’’ பீட்டர் மாமா.‘‘மன்னர் மாவட்டத்தில் குக்கர் கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்தவர் திடீரென தூக்கியடிக்கப்பட்டாராம். இவருக்கு பதிலாக மாவட்ட செயலாளராக கடைசி எழுத்தில் முடியும் மணி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளாராம். அதிர்ச்சிக்குள்ளான மாஜி மாவட்ட செயலாளரின் ஆதரவாளர்கள் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்களாம். தலைமைக்கு எதிராக விரைவில் முக்கிய முடிவு எடுப்பதோடு, குக்கரை விட்டு வெளியேறவும் முடிவு செய்துள்ளார்களாம். இந்த தகவல் வெளியில் கசிந்ததோடு தலைமைக்கும் சென்றுள்ளதாம். இப்படி கட்சியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறினால் டெல்டா மாவட்டம் முழுவதும் ‘குக்கர்’ காட்சி பொருளாக மட்டுமே இருக்கும். அதுல எது போட்டாலும் வேகாது என்ற அச்சத்தில் தலைமை கடும் அப்செட்டில் இருந்து வருவதாக மன்னர் மாவட்டம் முழுவதும் பேச்சாக ஓடுது…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அதிகாரிகளை கவனித்து கரன்சி யாரு அல்லுறாங்க…’’ என்றார் பீட்டர் மாமா.  ‘‘குமரி மாவட்டத்தில் 113 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 70க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் பார்கள் செயல்பட அனுமதி இருக்கிறது. ஆனால் அனுமதியின்றி டாஸ்மாக் கடைகளில் பார்கள் செயல்பட்டு வருகிறதாம். இதற்கு டாஸ்மாக் அதிகாரிகள் சிலரே உடந்தையாக செயல்படுகிறார்களாம். அனுமதியின்றி இயங்கும் பார்களில், மது வினியோகம் நடப்பதை கண்டுகொள்ளாமல் இருக்க காவல்துறைக்கும் நல்ல கவனிப்பு போய் விடுகிறதாம். லட்சக்கணக்கில் அரசுக்கு பணம் கொடுத்து பார் நடத்துபவர்கள் மத்தியில், எந்த வித செலவும் இல்லாமல், டாஸ்மாக் அதிகாரிகளை மட்டும் கவனித்துக் கொண்டு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் லாபம் பார்க்கிறார்களாம். இதனால் அரசுக்கு வர வேண்டிய வருமானம், தனி நபர்களின் சட்டை பைக்கு செல்கிறது. இது போன்று அனுமதியின்றி நடக்கும் பார்களில், 24 மணி நேரமும் மது விற்பனையும் கொடி கட்டி பறக்கிறதாம். எனவே காவல்துறை இதை கண்காணித்து செக் வைக்க வேண்டும் என்பதே பார் உரிமையாளர்களின் கோரிக்கையாக இருக்காம்…’’என்றார் விக்கியானந்தா.‘‘கோவை மேட்டர் ஒன்றை சொல்லுங்க கேட்போம்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கோவை மாநகராட்சியில் 3 மாதம் முன் பல்வேறு சாலை பணிகளை துவங்க திட்டமிடப்பட்டு பூஜை போடப்பட்டது. 16 திட்ட பணிகளுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. டெண்டர் முடிஞ்சு பணி ஆர்டர் வழங்கிய நிலையில் எந்த இடத்திலும் வேலை துவங்கவே இல்லையாம். ஒப்பந்தாரர்களிடம் ஒரு நபர் நான் தான் உங்களுக்கு டெண்டர் வாங்கி தந்திருக்கிறேன், இதற்கு கமிஷனாக 5 பர்சன்ட் எனக்கு தரவேண்டும் என கேட்டு வாங்கி கொண்டாராம். இந்த விவகாரம் மாநகராட்சி உயர் அதிகாரிகளுக்கு போய் விட்டதாம். மாநகராட்சியில் 5 பர்சன்ட் கமிஷன் வாங்குன ஆளு யாரு என பேச்சு பரவலாகி போச்சு. இவரின் பின்னணியில் இருக்கும் நபர் யார், 5 பர்சன்ட் பங்கு யார் யாருக்கு போனது என கண்டுபிடிக்க உத்தரவு போயிருக்குதாம். பணம் தந்த ஒப்பந்ததாரர்கள், ரொம்ப நாள் கழிச்சு வேலை செய்யலாம்னு நெனச்சா பெரிய வில்லங்கமா இருக்கே. இவுங்க எப்போ விசாரிச்சு தப்ப கண்டுபிடிக்க போறாங்க, எப்போ நமக்கு வேலை தரப் போறாங்க என புலம்பிக்கிட்டு இருக்காங்க. சாலை எல்லாம் குண்டும் குழியுமா மாறி போயிருச்சு. வேலை நடக்காம இருந்தா அசிங்காம போகும் என கவுன்சிலர்களும் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் சொல்லி வர்றாங்க. ‘‘5 பர்சன்ட் பங்காளிகள்’’ மீது கடும் நடவடிக்கை எடுக்கனும். அவர்களை மாநகராட்சி திட்ட பணிகளில் தலையிட அனுமதிக்கக் கூடாது என மேயர் தரப்பு எச்சரிக்கை செஞ்சிருக்குதாம்…’’ என்றார் விக்கியானந்தா.    …

The post சேலம் விவிஐபிக்கு எம்பி எலக்‌ஷனால ஏற்பட்டுள்ள புது தலைவலி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Salem VVIP ,Uncle ,Peter ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...