×

வீரபாண்டி சித்திரை திருவிழா தேரோட்டம்-பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

தேனி : தேனி அருகே வீரபாண்டியில் நடந்த சித்திரை திருவிழா தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மே 10ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கவுமாரியம்மன் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கவுமாரியம்மன் உற்சவ சிலைக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் அம்மன் அமர்த்தப்பட்டது. முன்னதாக யாழி பூஜை, யாகம் நடத்தப்பட்டது. இதையடுத்து, பரம்பரை முறைதாரர்களான போடி ஜமீன்தார் வடமலை முத்து சீலைராஜபாண்டியன் வம்சாவளியினர் மற்றும் பரம்பரை முறைதாரர்களான வீரபாண்டி நாட்டாண்மை மணி, கணக்குபிள்ளை ரத்தினசபாபதி, பெரியவீடு மாரிசாமி பிள்ளை, வயல்பட்டி தலைவர் குபேந்திரபாண்டியன், சத்திரப்பட்டி ஜெகதீஸ் ஆகியோர் முறை செய்த பிறகு நடந்த விழாவில் தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரன், திண்டுக்கல் போலீஸ் டிஐஜி ரூபேஸ்குமார் மீனா, எஸ்பி பிரவீன்உமேஸ்டோங்கரே, டிஆர்ஓ சுப்பிரமணி, தேனித்தொகுதி எம்.பி ரவீந்திரநாத், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜன், தேனி யூனியன் சேர்மன் சக்கரவர்த்தி, வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதாசசி ஆகியோருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து, கலெக்டர் முரளீதரன் தேரின் வடம்பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். தேரானது 50 அடி தூரம் சென்று கவுமாரியம்மன் கோயிலில் மூலவர் சன்னதிக்கு எதிராக நிலை நிறுத்தப்பட்டது.இன்று முதல் தெற்குரத வீதி, மேற்குரத வீதி, மின்சார அலுவலகம், போலீஸ் நிலையம் ஆகியவற்றின் சார்பாக தேருக்கு மண்டகப்படி பூஜைகள் நடத்தப்படும். பின்னர் வரும் மே 16ம் தேதி பேரூராட்சி அலுவலகம் முன் நடக்கும் மண்டகப்படியை, தொடர்ந்து அன்று மாலை தேர் நிலைக்கு வரும் கவுமாரியம்மன் முத்து சப்பரத்தில் தேர்தடம் பார்த்தல் நிகழ்ச்சிந டைபெறும்.தேரோட்ட ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் கலைவாணன், கோயில் செயல் அலுவலர் சுரேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகநயினார் மற்றும் விழா கமிட்டி கிராமமக்கள் செய்திருந்தனர்.தேரோட்டத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து கவுமாரியம்மனை தரிசனம் செய்தனர்….

The post வீரபாண்டி சித்திரை திருவிழா தேரோட்டம்-பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர் appeared first on Dinakaran.

Tags : Veerabandi Sitra Festival Chorota ,Theni ,Chitra Festival Cherotam ,Veerapandi ,Honey ,Veerabandi Shiritra Festival Chorotam ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்