×

அயலான்: விமர்சனம்

வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வருவது மாதிரியான ஹாலிவுட் படங்கள் ஏராளமாக வெளிவந்திருக்கிறது. தமிழில் அதுமாதிரியான ஒரு முயற்சி இது. உலகப் பெரும் கோடீஸ்வரரான சரத் கேல்கர் தனக்கு கிடைத்த விண் கல் ஒன்றில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சை பயன்படுத்தி பூமியின் அடி ஆழத்தில் உள்ள எரிவாயுவை எடுத்து அதன் மூலம் ஆயுதம் தயாரித்து பூமி முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைக்கிறார். வேற்றுகிரகத்தில் வாழும் இன்னொரு வகை மனிதர்களுக்கு இது தெரிய வருகிறது. இது நடந்தால் பூமி அழிந்து உலகத்தின் சமநிலை பாதிக்கப்படும் என்பதால் பூமிக்கு சென்று அதனை தடுத்து நிறுத்த கிரக வீரன் ஒருவனை (அயலான்) பூமிக்கு அனுப்பி வைக்கிறது.

பூமிக்கு வந்த அயலானின் பேஸ்ஜிப்பை (வாகனத்தை) வில்லன் கைப்பற்றி விட, தனித்து விடப்பட்ட அயலான் சிவகார்த்திகேயனிடம் வந்து சேர்கிறார். இயற்கை விவசாயத்தை நேசித்து வாழ்ந்த சிவகார்த்திகேயன் அந்த முயற்சியில் தோற்று விட்டதால் பிழைப்பு தேடி சென்னை வந்திருக்கிறார். அவரது நல்ல குணத்தை அறிந்து கொண்ட அயலான் அவருடன் இணைந்து கொள்கிறது. தனது சக்தியை அவருக்கு கொடுக்கிறது. இதற்கிடையில் வில்லன் அயலானை பிடித்து அடைத்து விட அசுர சக்தி பெற்ற சிவகார்த்திகேயன் அயலானையும், இந்த பூமியையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.

இப்படியான ஒரு கற்பனை விஞ்ஞான கதையில் காதலுக்கு ரகுல் பிரீத் சிங், அம்மா சென்டிமென்ட்டுக்கு பானுப்ரியா, காமெடிக்கு கருணாகரன், யோகிபாபு, பால சரவணன், ஆக்‌ஷன் வில்லிக்கு இஷா கோபிகர் என கலவையான சுவை கொடுத்து இரண்டரை மணிநேரத்தை கலகலப்பாக கடக்க வைக்கிறார் இயக்குனர் ஆர்.ரவிகுமார். அப்பாவித்தனத்தை கொண்டு காமெடி, அதிரடி ஆக்ஷனில் அனல் பறக்கும் சண்டை என தனக்கு தரப்பட்ட கேரக்டரை கொஞ்சமும் பிசிறின்றி இதிலும் தந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். நண்பர்களான கருணாகரனும், யோகி பாபும் சரியான காம்பினேஷனாக அமைந்து படத்தை கலகலப்பாக கொண்டு செல்கிறார்கள்.

ரகுல் பிரீத் சிங்கிற்கு பெரிதாக வேலை இல்லைதான். ஆனாலும் படம் முழுக்க அவர் இருப்பது போன்ற தோற்றத்தை திரைக்கதை ஏற்படுத்தி விடுகிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை படத்தை தரத்திற்கு உயர்த்துகிறது. ஆனால் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாதான் படத்தின் இரண்டாவது ஹீரோ. அவர் மட்டும் சொதப்பி இருந்தால் விட்டாலாச்சாரியார் படமாகி இருக்கும். இதுபோன்ற படத்தில் லாஜிக் பார்க்கத் தேவையில்லை என்கிற சலுகையை பயன்படுத்தி கூடுதல் சுவாரஸ்யமாக தந்திருக்கலாம். ‘வேற்றுகிரவாசி பூமிக்கு வருகிற’ ஹாலிவுட் ஒன்லைனை வைத்துக் கொண்டு புதிதாக யோசிக்காதது கற்பனை வறட்சியை காட்டுகிறது. என்றாலும் பண்டிகைகால படம் என்கிற தகுதியை தக்க வைத்துக் கொள்கிறான் அயலான்.

The post அயலான்: விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Hollywood ,Earth ,Sarath Kelkar ,Ayalan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ரேசர் இயக்குனரின் கேங்ஸ்டர் படம்