×

திண்டுக்கல்லில் நான்கு ஆண்டுகளாக நீடிக்கும் சுரங்கப்பாதை பணி

*பல கிமீ தூரம் சுற்றி செல்லும் அவலம் *உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதே ஒரே தீர்வுதிண்டுக்கல் : திண்டுக்கல்லில் 4 ஆண்டுகளாக நடந்து வரும் ரயில்வே சுரங்கப்பாதை பணியால் பொதுமக்கள் பல கிமீ தூரம் சுற்றி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இப்பணியை கைவிட்டு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திண்டுக்கல்லில்  இருந்து குஜிலியம்பாறை வழியாக கரூர் செல்லும் சாலையில் பள்ளிகள்,  கல்லூரிகள், தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான  குடியிருப்புகள் உள்ளது. மேலும் என்எஸ் நகர், சாலை ரோடு, எரியோடு,  கோவிலூர், குளத்தூர் என 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இந்த சாலை  வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த பிரதான சாலையில் காவிரி  கூட்டுக்குடிநீர் பம்ப் ஹஸ் அருகே திண்டுக்கல்- பொள்ளாச்சி ரயில்வே  தண்டவாளம் செல்கிறது. ரயில்கள் செல்லும் போது ரயில்வே கேட் மூடப்படுவதால்  அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும்  சிரமப்பட்டனர். இதன் காரணமாக கடந்த 2018ம் ஆண்டு அப்போதைய மத்திய, மாநில  அரசுகள் ரயில்வே தண்டவாளத்தின் அடியில் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிட்டனர்.  இதற்காக ரூ.17 கோடி செலவில் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.அப்போதே  சுரங்கப்பாதை அமைக்க கூடாது என எதிர்ப்பு கிளம்பியது. இந்த திட்டம்  தோல்வியடைந்த திட்டம் என்பதால் சுரங்கப்பாதை அமைப்பதை கைவிட்டு மேம்பாலம்  அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதையும் மீறி  சுரங்கப்பாதை அமைக்கும் பணி துவங்கியது. மேலும் சரியான திட்டமிடல் இல்லாத  காரணத்தினால் பாலம் குறுகலாக இருப்பதால் எதிரெதிரே 2 பேருந்துகள் வர முடியாத  நிலை இருந்தது. இதன் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்ட பணிகள்  சிறிதுகாலத்தில் மீண்டும் துவங்கப்பட்டது. மேலும் ரயில்வே சுரங்கப்பாதை  அமைக்கக்கூடிய இடத்தின் அருகே கிணறுகள், குட்டைகள், ஊற்றுகள் இருப்பதன்  காரணமாக அதிகளவில் தண்ணீர் ஊற்று வந்து கொண்டே இருந்தது. லேசான மழை  பெய்தாலும் சுரங்கப்பாதையில் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி விடுகிறது.  இதனால் பணிகள் துவங்கியது முதலே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி கொண்டே  இருப்பதால் கட்டுமான பணிகளை தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை.தற்போது  ஒரு வருடத்திற்கு மேலாக கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.  இப்பணிக்காக குஜிலியம்பாறை வழியாக கரூர் செல்லும் சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் புறநகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மாற்று வழியில் திண்டுக்கல்  நகருக்குள் வர வேண்டுமென்றால் சுமார் 3 கிமீ தூரம் சுற்றி திருச்சி  மேம்பாலம் வழியாக வர வேண்டி உள்ளது. இதனால் திருச்சி சாலையில் காலை மற்றும்  மாலை நேரங்களில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறுகின்றன.  கடந்த 4 வருட காலமாக ஆமை வேகத்தில் நடந்து வரும் சுரங்கப்பாதை பணிகளால்  இச்சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற வழிகாட்டி விநாயகர் கோயில் முற்றிலும்  சிதிலமடைந்து காணப்படுகிறது. அதேபோல் இந்த சாலையின் இருபுறங்களிலும் உள்ள  வணிக வளாகங்கள் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக மூடி கிடப்பதால் வணிகர்கள்  தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.இதுகுறித்து  பொதுமக்கள் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் இதுபோல்  சுரங்கப்பாதை அமைக்கும் பணி தோல்வி திட்டமாகவே அமைந்துள்ளது. சிறிது மழை  பெய்தாலே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி விடுகிறது. எனவே இந்த திட்டத்தை  கைவிட்டு அருகிலுள்ள திருச்சி மேம்பாலத்தில் இணைக்கும் வகையில் புதிய  உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்….

The post திண்டுக்கல்லில் நான்கு ஆண்டுகளாக நீடிக்கும் சுரங்கப்பாதை பணி appeared first on Dinakaran.

Tags : Dindukkal ,Didigukal ,Thindigul ,
× RELATED திண்டுக்கல்லில் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி