×

சேலம் விவிஐபியின் பிறந்த நாளை தெற்கு புறக்கணித்த கதையை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘ஏன், சேலம் விவிஐபி அப்செட்டில் இருக்கிறாராமே…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘சேலத்தில் நடந்த மாஜி விவிஐபியின் பிறந்தநாள் விழாவில் தென்மாவட்ட மாஜிக்கள் யாரும் தென்படவில்லையாம். இதனால் தேனிக்காரரோடு உள்ள கோஷ்டி பூசல் அம்பலத்துக்கு வந்துருக்காம். மாஜி விவிஐபி தனது பிறந்தநாளை மாங்கனி சிட்டியில் உள்ள சொந்த வீட்டில் ஜோராக கொண்டாடினாராம். காலை எட்டு மணிக்கே இதற்கு தயாரானவர், மதியம் 2 மணிவரைக்கும் வாழ்த்து மழையில் நனைஞ்சிக்கிட்டே இருந்தாராம். மெகா சைஸ் கேக்கோடு வந்த அடிப்பொடிகள், பொலிடிக்கல் சூப்பர் ஸ்டார் என்று அச்சிடப்பட்ட பனியன்களை அணிந்தும் மெய்சிலிர்க்க வச்சாங்களாம். இதில் கொங்குமண்டலம், மேற்குமண்டலத்தை சேர்ந்த மாஜிக்கள் நேரடியாக வந்து வாழ்த்து கூறி வணங்கிட்டு போனாங்களாம். ஆனால் தென்மாவட்டத்தை சேர்ந்த ஒரு மாஜி கூட, கூட்டத்தில் தென்படலையாம். போன வருஷ பிறந்த நாளுக்கு தென்மாவட்ட மாஜிக்கள் நிறைய பேரு வந்திருந்தாங்களாம். ஆனால் இந்த வருஷம் ஏன் யாரும் வரலை என்கிற கேள்வி மட்டும் இலைகட்சி தொண்டருங்க மத்தியில் ஒலிச்சுகிட்டே இருந்ததாம். காரணத்தை விசாரித்தபோது தேனிக்காரர் தன் பலத்தை காட்ட… சேலத்துக்கு போக வேண்டாம் என்று கூறி பலரை தடுத்துவிட்டாராம். இந்த தகவலை கேட்ட சேலம்காரர், தேனிக்காரர் கட்சியை உடைக்க முயற்சிக்கிறாரா என்று கோபப்பட்டாராம்…. இதனால் தேனிக்காரர் மீது சேலம்காரர் அப்செட்டில் இருக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘தேனிக்காரர் மீதான கோபத்தை மயிலைக்கு யார் திசை திருப்பிவிட்டது…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘மயிலை மாவட்டத்தில் இலை கட்சியின் மாவட்ட செயலாளராக கடைசி எழுத்தில் முடியக்கூடிய நாதன் என்பவர் இருந்தாராம். தேனிக்காரரின் தீவிர விசுவாசி என்பதால் தேர்தலுக்கு முன் அதிரடியாக தூக்கியடிக்கப்பட்டாராம். இவருக்கு பதிலாக மாவட்ட செயலாளராக சேலத்துக்காரரின் விசுவாசியான பவுனானவர் நியமிக்கப்பட்டுள்ளாராம். தலைமைக்குள்ளே ஈகோவால் மயிலை மாவட்டத்தில் ஒன்றாக இருந்த இலை கட்சியினர் தற்போது இரண்டு கோஷ்டியாக இருப்பதாக வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளதாம். தன்னை பழிவாங்கிய தேனிக்காரரை டென்ஷனாக்கவே இந்த ஏற்பாடு செய்ததாக சேலம்காரரின் ஆதரவாளர்கள் பேசிக் கொள்கிறார்களாம். தேர்தலுக்கு பின்னர் தனக்கு மீண்டும்  மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என தேனிக்காரரின் விசுவாசியானவர் கனவில்  இருந்தாராம். ஆனால், கடைசி வரைக்கும் அவரது கனவு பலிக்கவில்லையாம். இதனால் தலைமை மீது மாஜி செயலாளர் கடும் அதிருப்தியில் இருந்து வருவதாக அவரது ஆதரவாளர்களுக்குள்ளே பேசிக்கொள்கின்றனர்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘கிரிவலம் மாவட்டத்துல கிறுகிறுக்க வைக்கும் தகவலை சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ கிரிவலம் மாவட்டத்துல இருக்குற ஒரு வட்டத்துல, நிலம் அளவு எடுக்க ஒரு எல் வரைக்கும் பேரம் பேசுறாங்களாம் கிரிவலம் மாவட்டம் செங்கம் வட்டத்துல பொதுமக்கள், விவசாயிகள் என்று பலதரப்பட்ட மக்கள் சான்று பெறுவதற்காக வருவாய்த்துறையில் மனு அளிச்சு வர்றாங்க. அங்க சான்று கிடைக்கலைன்னா? மாவட்ட உச்ச அதிகாரியிடம் கோரிக்கை மனு அளிச்சு வர்றாங்க. அங்கே போனாலும் தீர்வு இல்லாம கிடப்பில் தான் இருக்குதாம். பட்டா பெயர் மாற்றம், பட்டா‌ உட்பிரிவு, வாரிசு சான்றுன்னு பல வகை சான்றுகளை பெறுவதற்கு கோரிக்கை மனு அளிச்சும் சான்று வாங்க முடியலையாம். 50 சென்ட் நிலத்தை அளக்குறதுக்கு, ஒரு எல் வரை பேரம் பேசுறாங்களாம். பணம் கைமாறினாத்தான், சான்று கிடைக்குதாம். பணம் இல்லையென்றால் அந்த கோரிக்கை மனுவை கிடப்பில் போட்டுறாங்களாம். கீழ்மட்டத்துல இருந்து மேல்மட்டம் வரைக்கும், உங்க ஆவணம் தவறாக இருக்குது. கணக்கு பதிவு தவறாக இருக்குது. நீங்கள் நீதிமன்றத்துக்குத்தான் போக வேண்டும். அங்க போனாத்தான் தீர்வு கிடைக்கும்னு சொல்றாங்களாம். இப்படியே சொல்லி, சொல்லியே செங்கம் வட்டத்துல பல நூறு  மனுக்கள் கோப்புகள் குவிந்து கிடக்குதாம். அதுவே பேரத்தொகை  கொடுத்தா, உடனே எல்லா சான்றும் கிடைக்குதாம். இந்த பிரச்னைகளுக்கு தீர்வுகாண மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கணும்னு பாதிக்கப்பட்டவங்க  குரல் கொடுக்குறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.‘‘கோவை என்றாலே கரன்சி தானே ஞாபகம் வரும்… இப்போது யாருன்னு சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கோவை  மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்த மூன்றெழுத்து பெயர் கொண்ட பொறியாளர் மற்றும் ஐந்து எழுத்து பெயர் கொண்ட பெண் செயற்பொறியாளர் ஆகியோர், செய்யாத வேலைக்கு ரூ.10 லட்சம் பில் போட்டு, அமுக்கின விவகாரத்தில் விஜிலென்ஸ் பிடியில் சிக்கியிருக்காங்க. இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதால் எந்த நேரத்திலும் கைது ஆகலாம்  என்ற நிலை உள்ளது. இதேபோல், பணிகளே செய்யாமல் பில் போட்டு சுருட்டிய பல அதிகாரிகள் இருக்கிறார்களாம். கடந்த இலைக்கட்சி ஆட்சியின்போது, தெற்கு பகுதியில் மூன்று பொறியாளர்கள், கிழக்கு மண்டலத்தில் மூன்று பொறியாளர்கள்,  மேற்கு மண்டலத்தில் 5 பொறியாளர்கள் வேலையே செய்யாமல் பல லட்சம் ரூபாய் பில் போட்டு அமுக்கியுள்ளனர். இவர்களும், லஞ்ச ஒழிப்பு போலீஸ் வலையில் விரைவில்  சிக்குவார்கள் என்ற பேச்சு, மாநகராட்சி வட்டாரத்தில் பலமாக எழுந்துள்ளது. விஜிலென்ஸ் பார்வை மாநகராட்சி பக்கம் திரும்பியுள்ளதால், கரன்சி குவித்த அதிகாரிகள் எல்லோரும் கடும் நடுக்கத்தில் இருக்கிறார்கள்…’’ என்றார் விக்கியானந்தா….

The post சேலம் விவிஐபியின் பிறந்த நாளை தெற்கு புறக்கணித்த கதையை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Salem ,South ,VVIP ,Yananda ,Peter ,South District ,Magis ,Maji VVIP ,wiki ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை