×

நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி; அதிமுக தூத்துக்குடி மாவட்ட பஞ். தலைவர் பதவி இழப்பு.! திமுக கைப்பற்றுகிறது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்தில் 17 வார்டுகள் உள்ளன. இதற்காக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக 12 இடங்களிலும், திமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றது. தலைவர் பதவி பொது பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அதிமுகவை சேர்ந்த சத்யா தலைவராகவும், செல்வக்குமார் துணை தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் துணை தலைவர் செல்வக்குமார் உள்ளிட்ட சில உறுப்பினர்கள், கடந்தாண்டு திமுகவில் இணைந்தனர். மேலும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டுமென கலெக்டரிடம் உறுப்பினர்கள் மனு அளித்தனர். இந்நிலையில் மாவட்ட பஞ். தலைவரான சத்யா மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான கூட்டம், தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் துணை தலைவர் செல்வக்குமார் உள்பட 14 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட பஞ். தலைவர் சத்யா மற்றும் அதிமுகவை சேர்ந்த பிரியா, பேச்சியம்மாள் ஆகிய 3 பேர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் பங்கேற்ற 14 உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால், மாவட்ட பஞ். தலைவர் சத்யா, தலைவர் பதவியை இழந்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் பதிவான வீடியோ காட்சிகளை நீதிமன்றத்துக்கும், மாநில தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பி வைத்த கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட பஞ்சாயத்து தலைவி பதவி காலியாக உள்ளதாக அறிவித்துள்ளார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி காலியாக உள்ளதாக கலெக்டர் அறிவித்துள்ள நிலையில் திமுகவின் கை ஓங்கியுள்ளது. இதனால் திமுகவை சேர்ந்த 16வது வார்டு கவுன்சிலர் பிரம்மசக்தி மாவட்ட பஞ். தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது….

The post நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி; அதிமுக தூத்துக்குடி மாவட்ட பஞ். தலைவர் பதவி இழப்பு.! திமுக கைப்பற்றுகிறது appeared first on Dinakaran.

Tags : AIADMK Tuticorin District Panj ,DMK ,Tuticorin ,Tuticorin District Panchayat ,AIADMK ,Dinakaran ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி