×

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு மாநில அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் முழுமையாக கட்டுப்பட்டவர்: உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: ‘மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு ஆளுநர் முழுமையாக கட்டுப்பட்டவர்,’ என பேரறிவாளன் விடுதலை வழக்கில் அதிரடியாக கூறியுள்ள உச்ச நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ், ‘ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் விசாரணை செய்யும் வழக்குகளில், குற்றவாளிகளுக்கு கருணை காட்டுவது, நிவாரணம் வழங்குவது ஒன்றிய அரசின் அதிகாரத்திற்கு கீழ்தான் வருகிறது. தமிழக அரசு தலையிட, இந்த விவகாரம் அம்மாநில அரசின் வரம்புக்குள் வருகிறதா? என்ற கேள்விதான் தற்போது எழுகிறது. ஒன்றிய அரசு, மாநில அரசுக்குமான பொதுவான சட்டப் பிரிவாக இருந்தாலும், அதில் இறுதி முடிவெடுக்க வேண்டிய நிலை வரும்போது, வழக்கை விசாரித்த விசாரணை அமைப்பு மட்டும்தான் அதில் அதிகாரம் பெறுகிறது. மேலும், சட்டப்பிரிவு 73 அல்லது 162ன் கீழ் முடிவெடுக்கும் போது மாநிலத்தின் அதிகாரங்களை நிராகரிக்க ஒன்றிய அரசுக்கு முன்னுரிமை வழங்கவும் வழிவகை உள்ளது. இந்த குற்றவியல் தண்டனை சட்டங்களின் (ஐபிசி) கீழ் தண்டிக்கப்பட்டவர்களுக்கு கருணை காட்டும் விவகாரத்தில், மாநில அமைச்சரவையின் முடிவுகள் சட்ட விதிகளை மீறி இருக்கும் பட்சத்தில், அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க மாநில ஆளுநருக்கு அதிகாரம் உண்டு,’ என தெரிவித்தார்.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, ‘தமிழக அரசு தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி, பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்கும் முடிவை ஒன்றிய அரசிடம் பகிர்ந்து கொண்டது. அதற்கு பிறகுதான், இந்த விவகாரத்தில் தங்களுக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக  ஒன்றிய அரசு தலையிட்டு வருகிறது. இதுதான் தற்போது மிகப்பெரிய குழப்பமாக மாறியுள்ளது. குறிப்பாக, ஒரு மாநில அமைச்சரவை ஒரு முடிவை எடுத்து ஆளுநருக்கு அனுப்பி வைக்கும்போது, ஆளுநர் அதில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை காட்ட முடியாது. ஒரு நபரை விடுதலை செய்யவோ அல்லது விடுவிக்க மறுக்கவோ தனிப்பட்ட முறையில் எந்த முடிவையும் எடுப்பதற்கான அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. ஏனெனில், மாநில அமைச்சரவையின் முடிவிற்கு அவர் முழுமையாக கட்டுப்பட்டவர். அமைச்சரவையின் முடிவிற்கு கையெழுத்தியிட வேண்டியது ஆளுநரின் வேலை. ஆனால், அதைக் கூட செய்யாமல் ஆவணங்களை கிடப்பில் போட்டு வைத்திருந்தார். பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவையின் முடிவை ஏற்றுக் கொள்ளாமல் இருந்து வருவதால் மிகப்பெரிய அரசியல் சாசன தவறை தமிழக ஆளுநர் செய்து விட்டார் என்றுதான் கூற வேண்டும். இதில், அனைத்து ஐபிசி வழக்குகள் மீதும் ஜனாதிபதி தான் முடிவெடுக்க வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்தால், 420 பிரிவுகளின் கீழ் முடிவெடுக்க வேண்டிய நிலைக் கூட  ஜனாதிபதிக்கு வரலாம்,’ என தெரிவித்தார்.  அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்கில் ஆளுநர் சார்பாக ஒன்றிய அரசு ஆஜராவது ஏன்? என்பது தான் எங்களின் முக்கிய கேள்வியாக இருக்கிறது. ஏனெனில், மாநில அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் முழுமையாக கட்டுப்பட்டவர் ஆவார். மேலும், இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தரப்பில் வைக்கப்பட்ட வாதங்கள் அனைத்தும், கிரிமினல் மற்றும் கொலை வழக்குகளில் மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று சொல்வது போன்று இருக்கிறது. மேலும், ஐபிசி குற்றங்களில் நிவாரணம் வழங்க ஜனாதிபதிக்கு தனி அதிகாரம் உள்ளதா? அப்படி இருந்தால் கடந்த 75 ஆண்டுகளில் ஐபிசி குற்றங்களில் ஆளுநர் வழங்கிய அனைத்து மன்னிப்புகளும் அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு எதிரானதா என்பதை தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் ஒன்றிய அரசு உள்ளது,’ என்று கூறி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பினரும் தங்களின் எழுத்துப்பூர்வ வாதங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படியும் உத்தரவிட்டனர்.‘‘மாநில அமைச்சரவை ஒரு முடிவை எடுத்து ஆளுநருக்கு அனுப்பி வைக்கும்போது, ஆளுநர் அதில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை காட்ட முடியாது. ஒரு நபரை விடுதலை செய்யவோ அல்லது விடுவிக்க மறுக்கவோ தனிப்பட்ட முறையில் எந்த முடிவையும் எடுப்பதற்கான அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. ஏனெனில், மாநில அமைச்சரவையின் முடிவிற்கு அவர் முழுமையாக கட்டுப்பட்டவர்,’’ – தமிழக அரசு வாதம்…

The post பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு மாநில அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் முழுமையாக கட்டுப்பட்டவர்: உச்ச நீதிமன்றம் கருத்து appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Perariwalan ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு