×

அக்குவாமேன் விமர்சனம்…

உலகத்தின் தரைப்பகுதி போன்று இன்னும் மனிதன் கால் பதிக்காத கடலின் அடி ஆழத்தில் ஒரு உலகம் இருந்தால் எப்படி இருக்கும் என்ற கேள்வியில் உருவான கற்பனை கதைதான் அக்குவாமேன். அவென்ஜெர்ஸ் படத்திற்கு பிறகு இறங்கு முகத்தில் இருந்த டிசிஎக்ஸ் நிறுவனத்தை தூக்கி நிறுத்திய படம். அவதார் படம் இயக்கிய ஜேம்ஸ் கேமரூனே படத்தை பார்த்து மிரண்டு அவரது ‘அவதார் 2’ படத்தை மெருகேற்றினார் என்று சொல்வார்கள். முதல் பாகத்தில் இயற்கையை மாசுபடுத்தி அட்லாண்டிக் ராஜ்ஜியத்தையே அழிக்க முயற்சிக்கும் தனது சகோதரர் கோர்டாக்ஸை, மன்னர் அட்லான் (ஜேம்ஸ் மோமாவா) பனிப்பாறைகளுக்குள் சிறைபிடித்து வைத்து விடுவார்.

இந்நிலையில், முதல் பாகத்தில் தனது தந்தையை கொன்ற அக்வாமேனை பழிவாங்க தேவையான தொழில்நுட்பத்தை தேடிக்கொண்டிருக்கும் பிளாக் மேண்டாவிற்கு (செகன்ட் யாஹ்யா), கோர்டாக்ஸின் மந்திர கோல் கிடைக்கிறது. அதன் மூலம், அக்வாமேனையும் அவரது குடும்பத்தையும் அழிக்க நினைக்கிறான் வில்லன். சிறைவைத்துள்ள தனது தம்பியை விடுவித்து அவனது துணையுடன் வில்லனுடன் மோதுகிறார் அக்குவாமேன். வெற்றி யாருக்கு என்பது மீதி கதை.

முதல் பாகத்தின் பலமே திரைக்கதையும், கிராபிக்ஸ் காட்சிகளும்தான் இந்த பாகத்தில் இந்த இரண்டுமே வலுவில்லாமல் போனது. சர்வல்லமை படைத்த ஹீரோவான அக்குவாமேன் ஒரு சாதாரண வில்லனை ஜெயிக்க தம்பியை துணைக்கு அழைக்கிறார். பொதுவாக இதுபோன்ற படங்களில் வில்லன் ஹீரோவை விட பலமானவனாக இருப்பான். இதில் அப்படி இல்லை. இப்படி பலவீனமான திரைக்கதையை கொண்டிருக்கிறது படம். கிராபிக்ஸ் காட்சிகளை பொறுத்தவரை முதல் பாகத்தை விட சில காட்சிகள் பிரமாண்டம் காட்டினாலும் மொத்தத்தில் பார்க்கும்போது அதுவும் பலவீனமாக இருக்கிறது.

சண்டை காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் அது டிரெய்லரில் வருவது போன்று உடனுக்குடன் முடிந்து விடுவதால் ஏமாற்றம். பூமியில் வாழும்போது அக்குவாமேன் தன் குழந்தையுடன் கொஞ்சும் காட்சிகள் யதார்த்தம். முதல் பாகத்தை விட இந்த பாகத்தை சிறப்பாக தர முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ஜேம்ஸ் வேன்.

அது முடியாத காரணத்தால் இரண்டாம் பாகத்தையே கடைசி பாகமாக அறிவித்து ‘தி லாஸ்ட் கிங்டம்’ என்றே தலைப்பும் வைத்து விட்டார். ஐ.நா.சபை அட்லாண்டா நாட்டை அங்கீகரிப்பதோடு படத்தை முடித்து விட்டார். அக்குவாமேனாக நடித்திருக்கும் ஜேம்ஸ் மோமாவோ போனால் போகட்டும் என்று எந்த மெனக்கெடலும் இல்லாமல் நடித்திருக்கிறார். அக்குவாமேன் முதல் பாகத்தை பார்க்காதவர்ளுக்கு இந்த பாகம் ஆச்சர்யம் தரும். பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் தரும்.

The post அக்குவாமேன் விமர்சனம்… appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : TCX ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்