×

தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு தொடங்கியது: முதல் நாளிலேயே பிட் அடித்த 2 பேர் சிக்கினர்

சென்னை:  தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத்  தேர்வு நேற்று  தொடங்கியது. மொழிப்பாட தேர்வில் துண்டுச் சீட்டு வைத்திருந்த 2 பேரை பறக்கும் படையினர் பிடித்தனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வரும் பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வு நேற்று  தொடங்கியது.  இதில் மொத்தம் 8 லட்சத்து 85 ஆயிரத்து 53 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். தமிழக பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 69 ஆயிரம் மாணவர்களும்,  புதுச்சேரி பள்ளிகளை சேர்ந்த  15 ஆயிரத்து 145 மாணவர்களும் தேர்வு எழுதினர்.   இவர்கள் தவிர பிளஸ் 1 தேர்வை தனித் தேர்வர்களாக  5 ஆயிரத்து 673 மாணவ, மாணவியரும் எழுதினர்.   மாற்றுத்திறனாளிகள் 5 ஆயிரத்து 290,  சிறைவாசிகள் 99 பேரும் எழுதினர்.முதல் நாளான நேற்று  மொழிப்பாடத் தேர்வு நடந்தது. வட மாவட்டங்களில் காலையில் இருந்தே மழை பெய்து கொண்டு  இருந்ததால், சற்று முன்னதாகவே தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். நேற்றைய தேர்வில் வழங்கப்பட்ட கேள்வித்தாள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். மேலும், குறைக்கப்பட்ட பாடப் பகுதியில்  இருந்தே கேள்விகள் இடம்பெற்று இருந்ததால், விடையளிக்க எளிதாக இருந்தது என்றும் தெரிவித்தனர். இதையடுத்து 12ம் தேதி (நாளை) ஆங்கில பாடத் தேர்வு நடக்கிறது. பிளஸ் 1 தேர்வு எழுதும்   பள்ளி மாணவர்களுக்காக 3119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனித் தேர்வர்களுக்காக 115 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர சிறைத் தேர்வு மையங்கள் 9 அமைக்கப்பட்டுள்ளன. பிளஸ் 1 தேர்வு அறை கண்காணிப்பு பணியில் 47315 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பறக்கும் படை 3,050 உருவாக்கப்பட்டுள்ளது.பிளஸ் 1 வகுப்புக்கான முதல் நாள் தேர்வான தமிழ்ப்பாட தேர்வின் போது பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில், துண்டுச்சீட்டு வைத்து எழுதியதாக இரண்டு மாணவர்கள் பறக்கும் படையிடம் சிக்கினர். அதன்படி, சேலம் மாவட்டத்தில் 1, திருச்சி மாவட்டத்தில் 1 என இரண்டு பேர் பிடிபட்டனர். இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பறக்கும் படையினர் தேர்வுத்துறைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.புழல் சிறையில் தேர்வு எழுதிய 26 கைதிகள்: தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ் 1 தேர்வு தொடங்கியது. இந்நிலையில், புழல் மத்திய தண்டனை சிறை வளாகத்தில், தேர்வு எழுதும் கைதிகளுக்காக, சிறப்பு தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த மையத்தில், தண்டனை சிறைக் கைதிகள் 21 பேர், விசாரணை கைதிகள் 3 பேர், பெண் கைதிகள் 2 பேர் என மொத்தம் 26 பேர் தேர்வு எழுதினார்கள். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறைத்துறை துணைத்தலைவர் முருகேசன் செய்து இருந்தார். மேலும், அவர்  பிளஸ் 1 தேர்வு எழுதும் கைதிகள் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்தார்….

The post தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு தொடங்கியது: முதல் நாளிலேயே பிட் அடித்த 2 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,plus 1 general election ,Puducherry ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...