ஈரோடு : பெருந்துறை பஸ் ஸ்டாண்டில் 35 பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்தும், 10 பஸ்களின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.ஈரோடு மாவட்டத்தில் இயக்கப்படும் பஸ்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்கள் இருந்தால் பறிமுதல் செய்ய கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, ஈரோடு சரக வட்டார போக்குவரத்து துணை ஆணையர் சுரேஷ்க்கு உத்தரவிட்டார். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை பஸ் ஸ்டாண்டில் ஈரோடு கிழக்கு ஆர்டிஓ வெங்கட்ரமணி, ஈரோடு மேற்கு ஆர்டிஓ பதுவநைாதன், பெருந்துறை ஆர்டிஓ சக்திவேல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அலுவலர்கள் தனபால், தேவராஜ் ஆகியோர் தனியார் மற்றும் அரசு பஸ்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என ஒவ்வொரு பஸ்களாக ஆய்வு மேற்கொண்டனர். இதில், 93 டெசிபல் முதல் 113 டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்களை டெசிபல் மீட்டர் கருவி மூலம் சோதனை செய்தனர். அப்போது, 35 பஸ்களில் அரசு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 35 பஸ்களிலும் பொருத்தியிருந்த ஏர் ஹாரன்களை உடனடியாக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், 10 பஸ்களின் உரிமையாளர்கள் மீது ஒலி மாசு ஏற்படுத்தியதாக வழக்கும் பதிவு செய்தனர். இந்த ஆய்வின்போது, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவகுமார், மேற்கு சிவகுமார், கதிர்வேல் ஆகியோர் உடன் இருந்தனர். இதேபோல், மாவட்டம் முழுக்க தொடர் ஆய்வு நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்….
The post பெருந்துறையில் 35 பஸ்களில் ஏர் ஹாரன்கள் பறிமுதல் 10 பஸ் உரிமையாளர்கள் மீது வழக்கு appeared first on Dinakaran.