×

வட்டமலைக்கரை ஓடை அணையில் இருந்து 25 ஆண்டுக்கு பின் 2-வது முறையாக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி; அமைச்சருக்கு பாராட்டு

வெள்ளக்கோவில் : திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள உத்தமபாளையத்தில் 700 ஏக்கர் பரப்பளவில், வட்டமலைகரை ஓடையை தடுத்து அணையானது 34.5 அடி உயரத்தில், 24.75 அடி தண்ணீர் தேங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. மேலும் அணையில் 0.27 டிஎம்சி இருப்பு வைக்கும் வகையிலும், 6043 ஏக்கர் பாசனம் பெறும் வகையில் இடது வலது கால்வாயுடன் கடந்த 1980ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. கடந்த 1980 முதல் 1991 வரை இருமுறை அணை நிரம்பி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.  பிஏபி பாசன விதிகளின்படி, பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு அனைத்து சுற்று தண்ணீர் வழங்கப்பட்டு, உப்பாறு அணையும் நிரம்பினால் வட்டமலைக்கரை அணைக்கு தண்ணீர் திறக்கலாம் எனும் அரசாணை அடிப்படையில்,கடந்த நவம்பர் இறுதியில் திருப்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பிஏபி பகுதிகளில் நீர் தேவை குறைந்தது, மேலும் தொடர் மழையால் உப்பாறு அணையும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. வட்டமலைக்கரை ஓடை அணைக்கு தண்ணீர் வழங்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த நவம்பர் 28ம் தேதி கள்ளிபாளையம் மதகில் இருந்து வினாடிக்கு 300 கன அடி வீதம் நீர் திறந்து விட்டனர். அணைக்கு தண்ணீர் வரும் வழியில் உள்ள 23 தடுப்பணைகள் நிரம்பி, மூன்று நாட்கள் கடந்து டிசம்பர் 1ம்தேதி மதியம் அணைக்கு தண்ணீர் வந்தடைந்தது.  அணை கடந்த 25 ஆண்டுகளாக வறண்டு கிடந்த நிலையில், அணையில், அப்போது 80 நாட்களாக 22 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால் அணையை சுற்றியுள்ள காங்கயம்பாளையம், செட்டிபாளையம், தாசவநாய்கன்பட்டி, உத்தமபாளையம், நாகமநாய்க்கன்பட்டி, மயில்ரங்கம்  ஆகிய சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாய கிணறுகள், ஊராட்சி ஆழ்துளை  கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது.   இந்த நீர் திறப்பின் மூலம் முலையாம் பூண்டி,குமாரபாளையம், அக்கரைபாளையம், நாச்சிபாளையம், மயில்ரங்கம் பகுதிகளில் உள்ள 6043 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். ஆனால் உள்ளாட்சி தேர்தல் நடைமுறைகள் அமலில் இருந்ததாலும், வாய்க்கால்கள் தூர் வருவதில் தாமதம் ஏற்பட்டதாலும் தண்ணீர் திறக்கவில்லை. இந்நிலையில் கடந்த மார்ச் 9 ம் தேதி வட்டமலைக்கரை ஓடை தடுப்பணையில் இருந்து செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பாசனத்துக்காக நீரை திறந்து வைத்தார். இடது மற்றும் வலது புற பிரதான கால்வாய் வழியாக, வினாடிக்கு 40 கன அடி வீதம் இரு வாய்க்காலில் நீர் அப்போது திறக்கப்பட்டது. மொத்தம் மூன்று சுற்றுகளாக 21 நாட்களுக்கு உரிய கால இடைவெளியில் நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் வெள்ளகோவில், முலையாம்பூண்டி சுற்று வட்டார பகுதிகளில்  உள்ள 6049 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெற்றன. கடந்த 25 ஆண்டுகளாக தண்ணீர் வரத்து இன்றி வறண்டு கிடந்த வட்டமலைக்கரை அணையில் நீர் இருப்பு வைக்கப்பட்டு , 1997ம் ஆண்டுக்கு பின் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது அணையில் 8.35 அடிக்கு நீர் இருப்பு உள்ள நிலையில், கடந்த ஒரு மாதமாக நிலவி வரும் கோடை வெப்பத்தின் காரணமாக வெள்ளக்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது‌. இதனைஅடுத்து பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்க செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனிடம் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து நேற்று முதல் வரும் 14ம் தேதி வரை 5 நாட்களுக்கு இடது மற்றும் வலது பிரதான வாய்க்காலில் வினாடிக்கு 40 கன அடி வீதம் தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்து விட்டனர். இந்த நீர் திறப்பின்போது வெள்ளக்கோவில் திமுக ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், நகரக்செயலாளர் ராசி முத்துக்குமார், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் லோகு, வட்டமலை பாசன சபை தலைவர் பாலபூபதி, திமுக பொதுக்குழு உறுப்பினர் மோகனசெல்வம், ஒன்றிய பொருளாளர் தெண்டபாணி, முன்னாள் பாசன சபை தலைவர் பழனிச்சாமி, பாசனசபை டைரக்டர்கள் மற்றும்  நிர்வாகிகள் விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அமைச்சருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். அணையில் நேற்று காலை நிலவரப்படி 8.35 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. அணைக்கு நீர் வரத்து இல்லை. 25 ஆண்டுகள் கடந்து இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக வட்டமலைக் கரை ஓடை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….

The post வட்டமலைக்கரை ஓடை அணையில் இருந்து 25 ஆண்டுக்கு பின் 2-வது முறையாக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி; அமைச்சருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Vattamalaikarai ,Vellakovil ,Uttampalayam ,Vellakovil, Tirupur district ,Vattamalaikarai stream ,Dinakaran ,
× RELATED பொய்யாமொழி விநாயகர், மலையம்மன் கோயில் கும்பாபிஷேகம்