×

களக்காடு அருகே சிறுத்தை, கரடிகளை தொடர்ந்து ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை :தென்னை, பனை மரங்களை சாய்த்து அட்டகாசம்

களக்காடு: களக்காடு அருகே சிறுத்தை, கரடிகளை தொடர்ந்து ஊருக்குள் புகுந்து ஒற்றை யானை தென்னை, பனை மரங்களை சாய்த்து அட்டகாசம் செய்தது. வனவிலங்குகள் படையெடுப்பால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் களக்காடு மலையடிவார கிராமங்களில் கடந்த 2 மாதங்களாக வனவிலங்குகள் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகிறது. சிவபுரம், கள்ளியாறு பகுதிகளில் முகாமிட்டுள்ள சிறுத்தை, நாய்களை வேட்டையாடியும், காமராஜ்நகர், மஞ்சுவிளை, கீழவடகரை, சிதம்பரபுரம் பகுதிகளில் தஞ்சமடைந்துள்ள கரடிகள் வாழைகளை நாசம் செய்தும் விவசாயிகளை அச்சுறுத்தி வருகின்றன. சிதம்பரபுத்தில் கரடி கடித்து குதறியதில் தொழிலாளி சக்திவேல் படுகாயம் அடைந்தார். இதுதவிர கடமான், பன்றிகளும் விவசாய பயிர்களை துவம்சம் செய்து வருகின்றன. இந்நிலையில் சிறுத்தை, கரடிகளை தொடர்ந்து ஒற்றை யானையும் ஊருக்குள் புகுந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த ஒற்றை யானை சிதம்பரபுரம் அகலிகை சாபம் தீர்த்த அய்யன் சாஸ்தா கோயில் மலையடிவாரத்தில் தங்கியுள்ளது. இந்த யானை கடந்த 3 நாட்களாக சிதம்பரபுரம் விளைநிலங்களில் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. நேற்று இரவில் அங்குள்ள விவசாய தோட்டத்தில் புகுந்த யானை 5க்கும் மேற்பட்ட பனைமரங்களையும், ஒரு தென்னை மரத்தையும் வேருடன் சாய்த்து அதன் குருத்துகளை தின்றுள்ளது. அதன்பின் அங்கிருந்து வெளியேறி சந்திரங்காட்டில் நுழைந்தது. சந்திரங்காட்டில் தற்போது தொழிலாளர்கள் பனை ஏறும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அங்கு ஒரு பனை மரத்தை சாய்க்க முயற்சி செய்தது. சத்தம் கேட்டு வந்த தொழிலாளர்கள் வெடிகள் போட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் யானை வனப்பகுதியை நோக்கி சென்றது. பனை ஏறும் தொழிலாளர்கள் அதிகாலையிலேயே பனை மரங்களில் ஏறுவதற்காக இரவில் அங்கேயே குடிசை அமைத்து தங்கியுள்ளனர். தற்போது யானை நடமாட்டத்தால் இரவில் தங்க அச்சமடைந்துள்ளனர். தொடர்ந்து வனவிலங்குகள் ஊருக்குள் படையெடுத்து வருவதால் மலையடிவார விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இதுகுறித்து சிதம்பரபுரத்தை சேர்ந்த விவசாயி ஜவஹர் கூறுகையில், 2 மாத காலமாக வனவிலங்குகள் அட்டகாசம் எல்லை மீறி வருகிறது. இதுபற்றி களக்காடு வனத்துறையிடம் புகார் அளித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. கலெக்டரிடம் புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகமும் பாராமுகமாகவே உள்ளது. எனவே மலையடிவார விளைநிலங்களில் விவசாயம் செய்து விவசாயிகளின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. ஏற்கனவே ஒருவரை கரடி தாக்கியும் கூட வனத்துறை இன்னும் அலட்சிய போக்கை தொடர்வது வேதனைக்குரியது ஆகும்” என்றார்….

The post களக்காடு அருகே சிறுத்தை, கரடிகளை தொடர்ந்து ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை :தென்னை, பனை மரங்களை சாய்த்து அட்டகாசம் appeared first on Dinakaran.

Tags : Khalakadam ,GALLEGADA ,Gelakadam ,
× RELATED களக்காடு அருகே இரவில் ஊருக்குள்...