×

குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்வதால் சிறுமியை மணந்த வாலிபரின் போக்சோ தண்டனை ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: திருப்பூர் மாவட்டம் பிச்சம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் தனது சொந்த அக்கா மகளான 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக சேர்ந்து வாழ்ந்துள்ளார். இதன் காரணமாக சிறுமி 15 வயதிலும், 17 வயதிலும்  குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். மருத்துவமனைக்கு சென்ற போது, தண்டபாணி மீது காவல்துறையால் போக்சோ சட்டம் பதிவு செய்யப்பட்டது. சிறுமிக்கு 18 வயது நிறைவடைந்தவுடன் தண்டபாணி அவரை திருமணம் செய்துள்ளார். ஆனால் போக்சோ சட்டத்தின் அடிப்படையில் தண்டபாணிக்கு கீழமை நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. சென்னை உயர் நீதிமன்றமும் இந்த உத்தரவை உறுதி செய்தது.தண்டபாணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு  நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக காவல்துறை தரப்பு வாதத்தில், ‘‘தண்டபாணி மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவருக்கான தண்டனையை குறைத்தால் அது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும். மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்ய வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டது.மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.பி.பார்த்திபன், ‘‘பாதிக்கப்பட்ட பெண் 18 வயதை கடந்து விட்டார். மேலும் அவர், கணவரான  தண்டபாணியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அது தொடர்பான திருப்பூர் கீழமை நீதிமன்ற நீதிபதியின்  அறிக்கையையும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தண்டபாணிக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்படும் பட்சத்தில் இளம் பெண்ணும் அவரது இரண்டு குழந்தைகளும் கடும் பாதிப்படைவார்கள். அதனால் வழக்கில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.இதையடுத்து நீதிபதிகள் உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தில் தண்டபாணி செய்தது தவறானது என்றாலும், தற்போதைய நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுடனான திருமண வாழ்க்கை சுமூகமாகவும், மகிழ்ச்சியாகவும் சென்று கொண்டிருப்பதாக கூறியிருப்பதால் ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தில் பிரச்னையை உருவாக்க விரும்பவில்லை. இந்த வழக்கில் தண்டபாணிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை அரசியலமைப்பு உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரமான பிரிவு-142ஐ பயன்படுத்தி ரத்து செய்கிறோம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணை தண்டபாணி நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை அதிலிருந்து அவர் தவறும் பட்சத்தில் அந்த இளம்பெண்ணோ அல்லது தமிழக காவல் துறையோ நீதிமன்றத்தை நாடும் பட்சத்தில், அவரது தண்டனை ரத்து செய்த இந்த தீர்ப்பானது மாற்றி அமைக்கப்படும்’’ எனக்கூறி வழக்கு மீதான விசாரணையை நீதிபதிகள் முடித்து வைத்தனர்….

The post குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்வதால் சிறுமியை மணந்த வாலிபரின் போக்சோ தண்டனை ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Thandapani ,Pudur district ,Phichambalayam ,
× RELATED யூடியூபர் சங்கர் வழக்கு விவகாரம்;...