×

அலற வைக்கும் உணவாக மாறிய ஷவர்மா: சாப்பிடலாமா… வேண்டாமா என விவாத பொருளானது

சென்னை: கேரளாவில் சமீபத்தில் ஷவர்மா சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 1920ம் ஆண்டு லெபனான் நாட்டில் அறிமுகமானது ஷவர்மா. அதை தொடர்ந்து சவுதி, துருக்கி, சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் பிரபலமாகி பாகிஸ்தான் மூலமாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது. கேரளாவில் 15 ஆண்டுகளுக்கு முன் இந்த உணவு அறிமுகமானது. பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியாவுக்கு சென்றுவரும் இந்தியர்கள், அங்கு இந்த உணவு வகைகளை சாப்பிட்டு அதனை கேரளாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியதாக தகவல்கள் சொல்கின்றன. ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்றவாறு அந்த நாட்டில் எந்த வகையான இறைச்சி பிரபலமாக இருக்குமோ அந்த மசாலா தடவிய இறைச்சியை ரொட்டிக்குள் வைத்து அதனை ஷவர்மா என பெயரிட்டனர். ஷவர்மா என்ற அரேபிய பெயருக்கு சுற்றுதல் என அர்த்தம். தமிழ்நாட்டில் சிக்கன் மீது பொதுமக்களுக்கு அலாதிப்பிரியம் என்பதால் அரிசி மாவு மற்றும் மைதா மாவு கலந்த குக்கூஸ் எனப்படும் ரொட்டியில் மசாலா கலந்த சிக்கன் மற்றும் மயோனைஸ் கொண்டு ஷவர்மா பரிமாறப்படுகிறது. சிக்கனை முழுவதுமாக எலும்பு இல்லாமல் எடுத்துவிட்டு அதனை ஒரு கம்பியில் சொருகி சுமார் ஒன்றரை மணி நேரம் சுற்றிசுற்றி வேக வைப்பார்கள். அதன்பின்பு குக்கூஸ் எனப்படும் ரொட்டியில் மயோனைசை அதிக அளவில் எடுத்து அதனை சிக்கனுடன் சேர்த்து ரொட்டியில் வைத்து தருவார்கள். 50 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை இந்த ஷவர்மா விற்கப்படுகிறது. விலைக்கு ஏற்றாற்போல் தரமும் நிர்ணயிக்கப்படுகிறது. தரம் இல்லாத ஷவர்மாவால் எது போன்ற பக்க விளைவுகள் ஏற்படுகின்றன என்பது குறித்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் சதீஷ் குமார் கூறுகையில், சிக்கனை ஒரு இரும்புக் கம்பியில் மசாலா தடவி சொருகி வைத்து அதை விற்பனை செய்கிறார்கள். இதன் மூலம் வெளிப்புறத்தில் இருக்கும் சிக்கன் நன்றாக வெந்து விடுகிறது. ஒரே நேரத்தில் அதிகபடியான வாடிக்கையாளர்கள் வருகை தரும் போது வெளிப்புறத்தில் உள்ள சிக்கன் காலியாகி உட்புறத்தில் இருந்து அதனை எடுக்கிறார்கள். இதன் மூலம் அந்த சிக்கன் சரியாக வேகாமல் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. அது மட்டுமல்லாது எந்தவித இறைச்சியையும் சரியாக வேக வைக்காமல் சாப்பிட்டால் கண்டிப்பாக அதில் பாக்டீரியா இருக்கும். இது அதை சாப்பிடுபவர்களை பாதிக்கும் எனவே நன்றாக வேக வைத்த சிக்கனை பரிமாற ண்டும்.மேலும் ஷவர்மாவில் பயன்படுத்தப்படும் மயோனைஸ் எனப்படும் சட்னியில் முட்டை, பூண்டு, எண்ணெய் இவை மூன்றும் கலக்கப்படுகிறது, இதனை ஒரு நாள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் வயிற்று உபாதை ஏற்படும். சிக்கனை அறுக்க பயன்படும்  துருப்பிடிக்காத அது நல்ல ஸ்டெயின்லஸ் ஸ்டீல் தரம் வாய்ந்த கத்தியாக இருக்க வேண்டும். இவ்வாறு அனைத்தும் தரமாக இருந்தால் ஷவர்மாவை கண்டு பயப்படத் தேவையில்லை என தெரிவித்தார்.* அசைவ உணவை 6 மணிநேரத்துக்குள் சாப்பிட வேண்டும்குடல் மற்றும் ஈரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன் கூறியதாவது: இறைச்சி மற்றும் உணவுகளை 6 மணி நேரத்திற்குள் உண்ண வேண்டும்.பொதுவாக கிளாஸ்ட்ரிடியம் எனப்படும் பாக்டீரியாக்கள் காற்று இல்லாத பகுதிகளில் கூட உயிர் வாழக்கூடியவை. இப்படிப்பட்ட உணவை சாப்பிடும் போது உணவுக்குழல் வழியாக உள்ளே சென்று அது வாயு தன்மையை அதிகரித்து மாரடைப்பு ஏற்படுகிறது. எனவே முறையாக சமைக்காத உணவு வகைகளை உண்ணக் கூடாது. குறிப்பாக அசைவ உணவுகளை வெயில் காலத்தில் முடிந்தவரை பொதுமக்கள் தவிர்ப்பது நல்லது. மேலும் தினமும் ஷவர்மா மயோனைஸ் எடுத்துக்கொள்வதால் கல்லீரல் பாதிக்கப்பட்டு கண்டிப்பாக அது கெடுதலை ஏற்படுத்தும். எப்போதுமே ஏதாவது ஒரு உணவு வகையால் ஒரு மரணம் ஏற்படும்போது மட்டுமே மக்கள் அதைப் பற்றி சிந்திக்கின்றனர். மற்ற வேலைகளில் அதனால் எந்த தீமையும் இல்லை என்று கருதி தினமும் ஒவ்வாத உணவு வகைகளை ருசிக்காக சாப்பிட்டு வருகின்றனர். இது மொத்தமாக ஒரு நாள் அவர்களுக்கு பெரிய பக்கவிளைவாக மாறும் என்பதை பொதுமக்கள் சிந்திக்க வேண்டும் என்றார் அவர்….

The post அலற வைக்கும் உணவாக மாறிய ஷவர்மா: சாப்பிடலாமா… வேண்டாமா என விவாத பொருளானது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Shawarma ,Kerala ,
× RELATED தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில...