×

நடிகை பலாத்கார வழக்கு நடிகர் விஜய் பாபுவுக்கு கோர்ட் கைது வாரன்ட்

திருவனந்தபுரம்: தலைமறைவாக இருக்கும் மலையாள நடிகர் விஜய் பாபுவுக்கு எதிராக எர்ணாகுளம் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. மலையாள இளம் நடிகை பலாத்கார வழக்கில் கொச்சி போலீசார் தேடி வரும் மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கிறார். அவர் துபாயில் இருக்கலாம் என்று கொச்சி போலீசார் கருதுகின்றனர். விசாரணைக்கு உடனே ஆஜராகுமாறு கூறி கொச்சி போலீசார் பலமுறை இமெயில் மூலம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், இதுவரை அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து சர்வதேச போலீஸ் உதவியுடன் விஜய் பாபுவை கைது செய்ய கொச்சி போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று, அவரை கைது செய்ய ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட பிறகு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் சர்வதேச போலீசுக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்படும். ரெட் கார்னர் நோட்டீசுக்கு முன்னதாக நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பிக்க வேண்டும். இந்நிலையில், நேற்று முன்தினம் விஜய் பாபுவுக்கு எதிராக எர்ணாகுளம் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்தது. இந்த கைது வாரண்டை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கொச்சி போலீசார் அனுப்பினர். இதையடுத்து இன்னும் ஒருசில தினங்களில் விஜய் பாபுவின் புகைப்படம் உள்பட வழக்கின் விவரங்கள் சர்வதேச போலீசின் இணையதளத்தில் வெளியிடப்படும். ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டால், அவர் எந்த நாட்டில் இருக்கிறாரோ அந்த நாட்டு போலீஸ் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்கும். ஆனால், கைதிகளை ஒப்படைக்க இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளில் மட்டுமே இதை அமல்படுத்த முடியும். தற்போது விஜய் பாபு துபாயில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. கைதிகளை ஒப்படைக்க துபாயும், இந்தியாவும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. இந்த விவரம் விஜய் பாபுவுக்கு தெரியும் என்பதால், அவர் அங்கிருந்து இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளாத ஏதாவது நாட்டுக்கு தப்பித்துச் செல்லலாம் என்று போலீசார் கருதுகின்றனர். எனவே, அதற்குள் அவரை கைது செய்ய கொச்சி போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்….

The post நடிகை பலாத்கார வழக்கு நடிகர் விஜய் பாபுவுக்கு கோர்ட் கைது வாரன்ட் appeared first on Dinakaran.

Tags : Vijay Babu ,Thiruvananthapuram ,Ernakulam Court ,Malay Young ,
× RELATED கேரளம் ஆக மாறியது கேரளா