×

அட்ரஸ் இல்லாமல் ஆகிக்கொண்டிருக்கும் குக்கர் கட்சியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தலைமை மீது அதிருப்தியால் குக்கர் கட்சியில் இருந்து விலக மாவட்ட செயலாளர் முடிவு செய்திருக்காராமே..’’ என்றார் பீட்டர் மாமா. “மன்னர் மாவட்டத்தின் குக்கர் கட்சியில் 3 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவருக்கு குக்கர் கட்சி தலைமை மீது அதிருப்தி உள்ளதாம். சமீபகாலமாக சின்ன மம்மிக்கு எதிராக குக்கர் கட்சி தலைமை முடிவு எடுத்து வருவதால் அதிருப்திக்குள்ளான சின்ன மம்மி ஆதரவாளர்கள் குக்கர் கட்சியில் இருந்து நிரந்தரமாக விலக முடிவு செய்துள்ளார்களாம். அந்த வகையில், முதல் விக்கெட் மன்னர் மாவட்டத்தில் தான் விழ வாய்ப்பு உள்ளதாம். முக்கியமாக, குக்கர் கட்சியின் தலைமைக்கும், மன்னர் மாவட்டம் மாவட்ட செயலாளருக்கும் இடையே தற்போது உரசல் ஏற்பட்டுள்ளதாம். இதனால், குக்கர் கட்சியில் இருந்து வெளியேற மாவட்ட செயலாளர் முடிவு செய்துள்ளாராம். இவரை பின்தொடர்ந்து இவரது ஆதரவாளர்களும் வெளியேற இருப்பதால் மன்னர் மாவட்டத்தில் குக்கர் கட்சி அட்ரஸ் இல்லாமல் போய் விடும் என கட்சிக்குள்ளே அரசல் புரசலாக பேசிக்கிட்டாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தலைமை ஆசிரியர்களுக்கு பாடம் எடுக்கிறாராமே டெக்னீசியன்.. என்னா விஷயம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்துல பாடினு முடியுற ஊர்ல, அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி இருக்குது. இந்த பள்ளியில 3 எழுத்து பெயர் கொண்ட பழம்பெரும் பாடகரோட பெயரை கொண்டவரு லேப் டெக்னீசியனாக கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வர்றாராம். பள்ளி  நிர்வாகத்துல கோல்மால் செய்து, வெளியே தெரியாம எப்படி பாக்கெட்டை நிரப்புறதுன்றதுல இவரு அத்துபடியாம். இப்ப, அந்த அரசு பள்ளியில இருக்குற தலைமை ஆசிரியருக்கு எப்படி, எதை செஞ்சா, வெளியே தெரியாமல் பாக்கெட்டை நிரப்பலாம்னு பாடம் எடுத்து வர்றாராம். இந்த டெக்னீசியன் சேறு காடான பள்ளியில் தலைமை ஆசிரியருக்கும் நிறைய ஆலோசனைகளை சொல்லி, பல வேலைகளை செஞ்சிருக்காராம். சமீபத்துல ஜெயிலுக்கு பக்கத்துல இருக்குற ஒரு பள்ளியில, ஒரு தலைமை ஆசிரியர் பணியிட மாற்றமாகி வர்றதுக்கு முன்னாடி, இந்த 3 எழுத்து டெக்னீசியனை அழைச்சி ஆய்வு செஞ்சாராம். அவரு ஆவணங்களை சரிபார்த்து ஓகே  சொன்னபிறகுதான், அந்த பள்ளியில தலைமையாசிரியர் பொறுப்பு ஏற்றுக்கொண்டாராம். இப்படி கைதேர்ந்த இவரோட ஆலோசனைகளை பெறுவதற்கு, சில பள்ளி தலைமை ஆசிரியர்களும் காத்துகிட்டிருப்பதாக, கல்வித்துறை வட்டாரத்துல பரபரப்பா  பேசிக்கிறாங்க.‘‘போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து ஏட்டையாவின் பைக்கை லவட்டிச் சென்றுவிட்டார்களாமே..’’ ‘‘ஆமா..தென் கோடியில் உள்ள காசி பெயரைக் கொண்ட மாவட்டத்தில்தான் இந்த கூத்து.  இங்குள்ள குளம் பெயரைக் கொண்ட காவல் நிலையத்தில் அறுபடை வீட்டின் கடவுள் பெயரைக் கொண்ட போலீஸ்காரர் பைனான்ஸ் நிறுவனம் மூலம் பைக் வாங்கினாராம். இதற்காக மாத தவணை தொகையை செலுத்தி வந்த அவருக்கு, 2 மாதங்களாக தவணை பாக்கி என பைனான்ஸ் நிறுவனம் குடைச்சல் கொடுத்ததாம். இந்த அக்கப்போரில் அந்த பைனான்ஸ் நிறுவனம் அவரது வீட்டிற்கு சென்று பைக்கை பறிமுதல் செய்திருந்தால்  கூட யாருக்கும் தெரியாமல் போயிருக்கும். தைரியமா போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து பைக்கை லவட்டிக் கொண்டு சென்றனராம். பணியை முடித்துக் கொண்டு வீட்டிற்கு செல்ல பசி மயக்கத்தில் வந்த அந்த ஏட்டையா பைக்கை காணோம் என  மயக்கம் வராத குறையாம். கிணத்தை காணோம் என்ற கதை போல போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தியிருந்த பைக்கை காணோம் என அந்த தமிழ் கடவுள் கூற சக போலீசாருக்கும் அதிர்ச்சியாம். கடைசியில் ஒரு வழியாக கண்காணிப்பு கேமராவை பார்த்த போது  தான், பைக்கை தூக்கியது பைனான்ஸ் நிறுவனம் என குட்டு வெளிப்பட்டது. இருந்தாலும் அந்த பைனான்ஸ் காரனுக்கு தில்லு தான் என கலாய்க்கின்றனர்  காக்கி சட்டையினர்’’ என்றார் விக்கியானந்தா.‘‘கோவை மாநகராட்சி கதை பரபரப்பா இருக்கே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு ஆண் பொறியாளர், ஒரு பெண் பொறியாளர் என இரு அதிகாரிகள் கடந்த இலைக்கட்சி ஆட்சியின்போது, செய்யாத பணிக்கு ரூ.10 லட்சம் பில் போட்டு அசத்திவிட்டனர். அந்த பணத்தை வாரி சுருட்டிய விவகாரம் தற்போது கணக்கு தணிக்கையின்போது தெரியவந்துள்ளது. இவ்விரு அதிகாரிகளுக்கும், கோவையை சேர்ந்த ஒரு ஒப்பந்ததாரர் உடந்தையாக இருந்துள்ளார். அவர் நடத்தி வரும் கம்பெனி பெயரில்தான் 10 லட்சம் ரூபாய்க்கு பில் போட்டு மாநகராட்சி பணத்தை ஆட்டையைப்போட்டுள்ளனர். தற்போது, இவர்கள் மூவர் மீதும் கூட்டுச்சதி, நம்பிக்கை மோசடி, அரசு பணத்தை கபளீகரம் செய்தல் ஆகிய பிரிவுகளின்கீழ் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் மூவரும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உள்ளது. இதனால், பயந்துபோன இவர்கள், கைது நடவடிக்கையை தவிர்க்க, முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இந்த விவகாரம் மாநகராட்சி அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தவுடன், மாநகராட்சியில் உயர் பொறுப்பில்  இருக்கும் இரு அதிகாரிகள் மெடிக்கல் லீவு போட்டுவிட்டு எஸ்கேப்  ஆகிவிட்டனர். இவர்கள், கடந்த இலைக்கட்சி ஆட்சியின்போது ரொம்பவே விசுவாசமாக  இருந்தவர்கள். இவர்கள் ஓட்டம் எடுப்பதை பார்த்தால், இவர்களும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வலையில் சிக்கிவிடுவார்கள்போல இருக்கிறதே என மாநகராட்சி வட்டாரத்தில் ஒரே பேச்சாக உள்ளது’’ என்றார் விக்கியானந்தா.  …

The post அட்ரஸ் இல்லாமல் ஆகிக்கொண்டிருக்கும் குக்கர் கட்சியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Cooker ,wiki Yananda ,District Secretary ,Cooker Party ,Uncle ,Peter ,Kukar ,Dinakaran ,
× RELATED டிடிவி தினகரன் முகத்தை குக்கருடன்...