×

கண்ணகி: விமர்சனம்

எத்தனையோ பேர் வந்து தன்னைப் பெண் பார்த்துவிட்டுச் சென்றும் கூட, திருமணமே நடக்காத அம்மு அபிராமிக்கு கடைசியில் திருமணம் நடந்ததா? தன் கணவருடனான திருமண வாழ்க்கை கசந்ததால் அவரை விவாகரத்து செய்துவிட்டு, அந்த விவாகரத்து வழக்கை நடத்திய வழக்கறிஞரையே காதலிக்கும் வித்யா பிரதீப்பின் காதல் கடைசியில் கைகூடியதா? லிவிங் டூகெதர் வாழ்க்கையை விரும்பும் ஷாலின் சோயாவுக்கு கடைசியில் அந்த வாழ்க்கை நிறைவைக் கொடுத்ததா? தனது வயிற்றில் இருக்கும் குழந்தையைக் கருவிலேயே கலைக்க நினைத்து, தன் காதலனுடன் டாக்டரைத் தேடி அலையும் கீர்த்தி பாண்டியன், கடைசியில் அதைச் செய்தாரா? இந்த 4 பெண்களின் தனித்தனி கதையும், அவர்களுக்கு இந்நிலை எப்படி ஏற்பட்டது என்ற சம்பவங்களும், இறுதியில் 4 கதைகளும் ஒரே புள்ளியில் இணைவதும், ‘கண்ணகி’ படத்தின் வியக்க வைக்கும் கிளைமாக்ஸ்.

மிகவும் சிக்கலான திரைக்கதையின் மூலம் பெண்களின் உளவியல் மற்றும் சமூகப் பிரச்னைகளை யதார்த்தமான கோணத்தில் சொல்லியிருக்கிறார், இயக்குநர் யஷ்வந்த் கிஷோர். 4 பெண்களின் வாழ்க்கையை இயல்பாகச் சொன்ன அவர், அவற்றை இணைக்கும் புள்ளியை இன்னும் எளிமையாகச் சொல்லியிருக்கலாம். எனினும், கனமான விஷயத்தை திறம்பட கையாண்டதற்காக அவரை வரவேற்கலாம். 4 ஹீரோயின்களில், நடிப்பில் கீர்த்தி பாண்டியன் டாப் இடத்தைப் பிடிக்கிறார். கருவைக் கலைக்கும் கட்டாயம், குழந்தை மீது பாசம் என்று இருவிதமான மனநிலையில் தவிக்கிறார். அடுத்து, அம்மு அபிராமி. திருமணமே ஆகாத தவிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கும், தந்தை மயில்சாமிக்குமான பாசம் குறிப்பிடத்தக்கது. விவாகரத்து பெண்ணின் மனம் எப்படி தவிக்கும் என்பதை அற்புதமாக உணர்த்துகிறார், வித்யா பிரதீப்.

இன்றைய நவீன யுக பெண்ணைக் கண்முன் கொண்டு வந்து அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்படுத்தி இருக்கிறார் ஷாலின் சோயா. ஆண்களின் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தாலும், கதை முழுவதும் பெண்களின் மீதே பயணிப்பதால், அவர்கள் அதிகமாக கவனிக்கப்படவில்லை. அம்மா கேரக்டரில் மவுனிகா நடித்துள்ளார். ஷான் ரஹ்மான், அரவிந்த் சுந்தர் ஆகியோரின் பின்னணி இசை கதையோட்டத்துக்கு ஆங்காங்கே வழிவிட்டும், வழிநடத்தியும் சென்றிருக்கிறது. ராம்ஜியின் ஒளிப்பதிவு சிறப்பு. பெண்களின் பிரச்னைகள் குறித்து பேசும் படம் என்றாலும், ஆண்கள் தரப்பு நியாயத்தையும் அதற்கு நிகராகப் பேசியிருக்க வேண்டும். அழகான பெண் அம்மு அபிராமிக்கு மாப்பிள்ளையே கிடைக்கவில்லை என்பதை நம்ப முடியவில்லை. எனினும், ‘கண்ணகி’ கண்ணியமானவள்.

The post கண்ணகி: விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kannagi ,Ammu Abrami ,Vidya ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பளியன்குடி வனப்பகுதி வழியாக கண்ணகி...