×

2023ல் ஹஜ் புறப்பாடு இடமாக சென்னை பரிசீலிப்பு ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் 4,000க்கும் மேற்பட்டோர், சென்னையிலிருந்து சவுதி அரேபியாவிற்கு தங்களது பயணத்தை தொடங்குகின்றனர். கடந்த 2019ம் ஆண்டில், தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்து 4,500க்கும் மேற்பட்டோர் ஹஜ் புனித பயணத்தினை சென்னையில் இருந்து தொடங்கினர். இந்த சூழ்நிலையில், இந்திய ஹஜ் குழு, கொரோனா பெருந்தொற்று காரணமாக, ஹஜ் புனித பயணப் புறப்பாட்டு இடங்களின் எண்ணிக்கை 21லிருந்து 10 ஆகக் குறைத்தது. அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த ஹஜ் பயணிகள் தங்களது புனித பயணத்தை கேரள மாநிலம், கொச்சியிலிருந்து தொடங்க அனுமதிக்கப்பட்டிருந்தது. எனவே, தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்வோரின் வசதியை கருத்தில் கொண்டு, முன்பிருந்ததுபோல் சென்னையிலிருந்து அவர்கள் ஹஜ் புனித பயணத்தை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அந்தவகையில், ஹஜ் புனித பயண புறப்பாட்டு இடமாக சென்னை பரிசீலிக்கப்படும் என முக்தார் அப்பாஸ் நக்வி பதில் அளித்திருந்தார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து நேற்று சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு: 2023ல் இருந்து ஹஜ் புனித பயணப் புறப்பாட்டு இடமாக சென்னை பரிசீலிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளமைக்காக ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு நன்றி. இனி வரும் காலங்களில், எந்த சூழ்நிலையிலும் ஹஜ் புனித பயணப் புறப்பாட்டு இடமாக சென்னை இருப்பதை உறுதிசெய்யுமாறு அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post 2023ல் ஹஜ் புறப்பாடு இடமாக சென்னை பரிசீலிப்பு ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Union Minister ,Chennai ,Hajj ,Tamil Nadu ,Haj ,Saudi Arabia ,
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...