×

‘சதுரங்க வேட்டை’ பட பாணியில் துணிகரம் இரிடியம் மோசடி கும்பல் 3 பேர் கைது; ரூ.7.5 லட்சம் பறிமுதல்

கோவை : ‘சதுரங்க வேட்டை’ பட பாணியில் கோவை லாட்ஜில் தொழிலாளியிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி கொண்டமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மனோகரன் (60). சென்ட்ரிங் தொழிலாளி. இவரது செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்பு மூலம் 3 பேர் அறிமுகம் ஆனார்கள். அவர்கள் மனோகரனிடம், ‘‘எங்களிடம் ரூ.1 கோடி மதிப்புள்ள இரிடியம் உள்ளது. இதை உங்களுக்கு ரூ.30 லட்சத்துக்கு தருகிறோம்’’ என கூறினர். அவர்களின் பேச்சில் மயங்கிய மனோகரன், ரூ.30 லட்சம் கொடுத்து அதனை வாங்க ஆசைப்பட்டுள்ளார். தொடர்ந்து செல்போனில் பேசிய நபர்கள் மனோகரனை கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே வரும்படி கூறினர்.இதனையடுத்து மனோகரன், தேனியில் இருந்து கடந்த மாதம் 18ம் தேதி கோவை வந்து, தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். பின்னர் அந்த நபர்களை செல்போனில் தொடர்பு கொண்டு, ரூ.30 லட்சத்துடன் கோவை வந்துள்ளதாகவும், தங்கியிருக்கும் இடம் குறித்தும் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் லாட்ஜூக்கு மனோகரனை பார்க்க கையில் பேக்குடன் 3 பேர் வந்துள்ளனர். அவர்கள் பேக்கை மனோகரனிடன் கொடுத்து, ‘‘இதிலுள்ள பொருட்கள் சிறப்பு பூஜை செய்து வைக்கப்பட்டுள்ளது. உடனே திறந்து பார்க்க வேண்டாம். ஒரு மணி நேரம் கழித்து பாருங்கள்’’ எனக் கூறிவிட்டு ரூ.30 லட்சம் பணத்தை வாங்கி கொண்டு சென்றுள்ளனர். ஒரு மணி நேரம் கழித்து திறந்து பார்த்தபோது பேக்கில் ஒரு செங்கல் இருந்துள்ளது. அப்போதுதான் தன்னிடம் மோசடி செய்துள்ளதை மனோகரன் உணர்ந்தார். சதுரங்க வேட்டை பட பாணியில் நடந்த இந்த மோசடியால் அதிர்ச்சியடைந்த மனோகரன் இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று விசாரித்தனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர். அதைவைத்து தீவிர விசாரணையில் இறங்கினர்.அப்போது மோசடியில் ஈடுபட்டது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த கார் டிரைவர் வேலுசாமி (27), அவரது நண்பர்கள் தேனியைச் சேர்ந்த நிர்மல் செல்வன் மற்றும் வினோத்குமார் என்பதும், இந்த மோசடி சம்பவத்திற்கு வேலுசாமி மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது. ஒரே பகுதியைச் சேர்ந்த இவர்கள் மனோகரனை ஏமாற்றும் நோக்கில் கோவைக்கு வரவழைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.7.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது….

The post ‘சதுரங்க வேட்டை’ பட பாணியில் துணிகரம் இரிடியம் மோசடி கும்பல் 3 பேர் கைது; ரூ.7.5 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்