திருவனந்தபுரம்: பாட்டி வேடங்களில் நடித்து பிரபலமான மலையாள நடிகை சுப்புலட்சுமி மரணம் அடைந்தார். மலையாளத்தில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான நந்தனம் என்ற படத்தில் அறிமுகமானவர் சுப்புலட்சுமி (87). முதல் படத்தில் நடித்தபோது இவரது வயது 66. அந்த படத்தில் பாட்டி வேடத்தில் அறிமுகமாகி நடிப்பில் அசத்தி இருந்த சுப்புலட்சுமி பிரபலமானார். அதன் பிறகு வந்த கல்யாண ராமன், திளக்கம், பாண்டிப்படா, சிஐடி மூசா உள்பட ஏராளமான படங்களில் பாட்டி வேடங்களிலேயே தொடர்ந்து நடித்து வந்தார். தமிழில் ராமன் தேடிய சீதை, சமீபத்தில் வெளியான நடிகர் விஜய்யின் பீஸ்ட் ஆகிய படங்களிலும் பாட்டி வேடத்தில் நடித்து இருந்தார். இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பாட்டி வேடங்களிலேயே தோன்றினார்.
இந்தநிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சுப்புலட்சுமி திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு சுமார் 8.45 மணி அளவில் அவர் காலமானார். நடிகை சுப்புலட்சுமியின் உடல் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள அவரது பேத்தியின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து மாலை திருவனந்தபுரம் தைக்காட்டில் உள்ள மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. சிறந்த பாடகியும், நடனக் கலைஞருமான இவர் 1957ம் ஆண்டு அகில இந்திய வானொலியில் பணிக்கு சேர்ந்தார். அப்போது தென்னிந்தியாவில் வானொலியில் முதல் பெண் இசைக் கலைஞர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
The post பிரபல ‘பாட்டி’ நடிகை சுப்புலட்சுமி மரணம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.