×

ஊழியர்கள் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து ரயிலில் ₹2 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை முயற்சி

* 2 பேர் அதிரடி கைது; ஜோலார்பேட்டையில் பரபரப்பு* பட்டறை உரிமையாளர் தகவல் கொடுத்தது அம்பலம்ஜோலார்பேட்டை :  ரயிலில் ஊழியர்கள் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து ₹2 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடிக்க முயன்ற 2 பேரை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பட்டறை உரிமையாளர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொள்ளை முயற்சி நடந்திருப்பது தெரியவந்துள்ளது.கோவையில் உள்ள காந்திபார்க் பகுதியை சேர்ந்தவர் ரகுராம் (44). நகைக்கடை வைத்துள்ளார். சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்டரின் பெயரில் தங்கக் கட்டிகள் வாங்கி கோவையில் உள்ள ராஜூ என்பவரின் நகை பட்டறையில் கொடுத்து தங்க நகைகளை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.இதேபோல், சென்னையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு ஆர்டரின்பேரில் 5 கிலோ தங்கத்தை பெற்று ராஜூவிடம் கொடுத்து நகைகளை தயாரித்து வாங்கி கடை ஊழியரான மதுரையை சேர்ந்த மாரிமுத்து(30), அய்யனார்(23) ஆகியோரிடம் நேற்று முன்தினம் இரவு கொடுத்து அனுப்பினார். சுமார் ₹2 கோடி மதிப்பிலான நகைகளை சென்னையில் சப்ளை செய்ய சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு செய்யப்பட்ட எஸ்-9 கோச்சில் இருவரும் பயணம் செய்தனர்.நள்ளிரவில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தின் 5வது பிளாட்பாரத்தில் நிற்க ரயில் மெதுவாக வந்தபோது, மர்ம நபர்கள் 2 பேர் மாரிமுத்து, அய்யனார் ஆகிய இருவரும் லக்கேஜ் ரேக்கில் நகை பையை வைத்து செயின் மூலம் லாக் செய்து வைத்திருந்ததை எடுக்க முயன்றுள்ளனர். அப்போது மாரிமுத்து ஒருவரின் கையை பிடித்துள்ளார். அவர் பெப்பர் ஸ்பிரேவை இருவரின் முகத்திலும் அடித்துள்ளார். இதனால் அவர்கள் கத்தி கூச்சலிடவே சக பயணிகள் அந்த மர்ம நபர்களை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் பிளாட்பாரத்தில் குதித்து தப்பிச் சென்றனர். புகாரின்படி ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரித்தனர். நீலநிற சட்டை அணிந்திருந்த 2 பேரையும் ஜோலார்பேட்டை ஜங்ஷன் பகுதியில் ரோந்து போலீசார் விரட்டி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் கண்ணனூரை சேர்ந்த அஷ்ரப்(30), சூரஜ்(26) என்பது தெரியவந்தது. நகை பட்டறையின் உரிமையாளர் ராஜூ, பிடிபட்ட சூரஜின் நண்பர் என்பதும் தெரிந்தது. ராஜூ கொடுத்த தகவலின்பேரில்தான் அவர்கள் நகைகளை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதனையடுத்து ரயில்வே போலீசார் இருவரையும் கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் நேற்று அடைத்தனர். ராஜூவை தேடி வருகின்றனர்.  ₹2 கோடி மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், அவற்றை தயாரிக்க கொடுத்த ரகுராம் உரிய வரி செலுத்தியுள்ளாரா என வருமானவரித்துறை அதிகாரிகள் மூலம் விசாரித்த பிறகே ஒப்படைக்கப்படும் என ரயில்வே போலீசார் தெரிவித்தனர்….

The post ஊழியர்கள் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து ரயிலில் ₹2 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Zolarpate ,Amalamjolarpet ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...