×

உணவுப்பொருளின் தரத்துக்கு டிஎஸ்ஓ தான் பொறுப்பு ரேஷனில் தரமான அரிசி மட்டுமே வழங்கப்படும்: விவசாயிகளிடம் லஞ்சம் பெற்ற 3 பேர் சஸ்பெண்ட்; அமைச்சர் சக்கரபாணி அதிரடி

சென்னை: வருங்காலங்களில் ரேஷன் கடைகளில் தரமான அரிசி மட்டுமே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் சிறு காவேரிப்பாக்கம் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு குடோனில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களின் தரம் குறித்து, தமிழக உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று திடீர் ஆய்வு செய்தார். பின்னர், சிறு காவேரிப்பாக்கம் ரேஷன் கடையில் ஆய்வு செய்த அமைச்சர், அருகில் உள்ள குடிசை வீட்டில் வசிக்கும் மூதாட்டி தனகோட்டி வீட்டுக்கு சென்று , அவருக்கு வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.தொடர்ந்து குன்றத்தூர், தாமல், விஷார், செங்கல்பட்டு மாவட்டம் கீரப்பாக்கம் ஆகிய கிராமங்களுக்கு சென்று நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கிருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அந்த நேரத்தில், நெல் கொள்முதல் நிலையத்துக்கு வரும் விவசாயிகளிடம் 3 பேர் லஞ்சம் பெற்றதாக புகார் வந்தது. அதன்பேரில், 3 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். குடோனில், மூட்டைகளில் தேக்கி வைக்கப்பட்ட அரிசியின் தரம், ரேஷன் கடைகளுக்கு அனுப்ப இருந்த அரிசியின் தரத்தை ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த மாவட்ட உணவு வழங்கல் அலுவலரிடம், குடோனில் இருந்து ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லும் அரிசி தரமற்றதாக இருந்தால், அதற்கு, முழு பொறுப்பு நீங்கள்தான், உங்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். பின்னர் அமைச்சர் சக்கரபாணி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாயிகளிடம்  லஞ்சம் பெற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 27 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2 பேர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். 2 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லும் அரிசி தரமாக  இருப்பதற்கு மாவட்ட உணவு வழங்கல் அலுவலருக்கு தான் முழு பொறுப்பு. வரும் காலங்களில் ரேஷன் கடைக்கு அரிசி கொண்டு வரும் முன்பே குடோனில், அதன் தரத்தை சரி பார்த்து அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாலாஜாபாத்தில் வட்டத்தில் 10 ரேஷன் கடை விற்பனையாளர்கள் தரமற்ற அரிசி வழங்கியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணிச்சுமை அதிகமாக இருப்பதால்  4 ஆயிரம்  காலி பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்….

The post உணவுப்பொருளின் தரத்துக்கு டிஎஸ்ஓ தான் பொறுப்பு ரேஷனில் தரமான அரிசி மட்டுமே வழங்கப்படும்: விவசாயிகளிடம் லஞ்சம் பெற்ற 3 பேர் சஸ்பெண்ட்; அமைச்சர் சக்கரபாணி அதிரடி appeared first on Dinakaran.

Tags : DSO ,Minister ,Chakrapani ,Chennai ,Tamil Nadu Food and Supply ,
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...