×

கேரளாவில் அதிர்ச்சி சம்பவம் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி பரிதாப பலி: 34 பேர் மருத்துவமனையில் அனுமதி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு அருகே சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பிளஸ் 1 மாணவி பரிதாபமாக இறந்தார். கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள செறுவத்தூர் பகுதியை சேர்ந்தவர் முகம்மது அனஸ். அங்குள்ள பஸ் நிலையம் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார்.  கடந்த 2 தினங்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த பிளஸ்1 மாணவியான நாராயணன் மகள் தேவநந்தா (16), உடன் படிக்கும் தோழிகளுடன் சேர்ந்து இந்த கடையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு உள்ளார். சிறிது நேரம் கழித்து தேவநந்தா உள்பட அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதே ஓட்டலில் ஷவர்மா சாப்பிட்ட மேலும் பலருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில், தேவநந்தாவுக்கு உடல்நிலை மோசமானதால் அவரை காஞ்சங்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். தற்போது காஞ்சங்காடு மருத்துவமனையில் மாணவர்கள் உள்பட 34 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்மந்தப்பட்ட ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டு, ஓட்டல் உரிமையாளர் முகம்மது அனஸ் மற்றும் ஊழியரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கேரளா முழுவதும் உள்ள சிக்கன் ஷவர்மா விற்பனை செய்யும் ஓட்டல்கள், கடைகளில் பரிசோதனை நடத்த உள்ளாட்சித் துறை அமைச்சர் கோவிந்தன் உத்தரவிட்டு உள்ளார்.மற்றொரு மாணவி கவலைக்கிடம்: காஞ்சங்காடு அரசு மருத்துவமைனயில் சிகிச்சை பெற்று வந்த 3 மாணவிகளின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவர்கள் உடனடியாக கண்ணூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒரு மாணவி நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பும் இதே  போல கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு ஒரு வாலிபர் உயிரிழந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கேரளாவில் ஷவர்மா விற்பனைக்கு பல மாதங்கள்  தடைவிதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது….

The post கேரளாவில் அதிர்ச்சி சம்பவம் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி பரிதாப பலி: 34 பேர் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Kerala ,Pharitaba ,Thiruvananthapuram ,Kasargod ,Kerala State ,Parithabha ,Dinakaran ,
× RELATED கேரளம் ஆக மாறியது கேரளா