×

தொழிலாளர்களை வாழ்த்தும் அரசாக இல்லாமல் தொழிலாளர்களை வாழ வைக்கும் அரசாக திமுக அரசு விளங்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: மே தினத்தையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவு தூணுக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சி.வி.கணேசன், சிவசங்கரன், பி.கே.சேகர்பாபு, எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், ஆர்.எஸ்.பாரதி. டிகே.எஸ்.இளங்கோவன், ஆ.ராசா, தமிழச்சி தங்கப்பாண்டியன், எம்எல்ஏக்கள் உதயநிதி ஸ்டாலின், மாதவரம் சுதர்சனம், தாயகம் கவி, திமுக மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு, தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், துணைமேயர் மகேஷ்குமார், பகுதி செயலாளர் மதன்மோகன், தொமுச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் எம்பி, பொருளாளர் கி.நடராஜன்,  செயலாளர் பொன்னுராம், சு.பத்மநாபன், டியுசிஎஸ் தொமுச பொதுச்செயலாளர் ராஜன் சாமிநாதன், காஞ்சி பண்டக சாலை தொமுச செயலாளர் கா.செல்வமணி உள்ளிட்ட பேரவை நிர்வாகிகள், இணைப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான திமுக தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.நினைவுச் சின்னத்துக்கு மலரஞ்சலி செலுத்திய பின்னர் மு.க.ஸ்டாலின் மே நாள் வாழ்த்துரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:தொழிலாளர்களை வாழ்த்தும் அரசாக மட்டுமல்ல – தொழிலாளர்களை வாழவைக்கும் அரசாகவும் இன்றைக்கு தி.மு.க. அரசு இருந்து கொண்டிருக்கிறது. திமுகவின் ஆட்சியே ஏழை, எளிய, பாட்டாளி பெருமக்களுக்காக நடைபெறும் ஆட்சிதான். பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் இருந்த ஆட்சியாக இருந்தாலும் சரி, அதைத் தொடர்ந்து தலைவர் கலைஞர் பொறுப்பேற்று நடத்திய ஆட்சியாக இருந்தாலும் சரி, ஏழைகள் – தொழிலாளர் தோழர்கள் மனமகிழ்ச்சியோடு சிரிக்கும் ஆட்சியாகத்தான் இருந்தது. இப்போதும் அப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறது. தலைவர் கலைஞர் நடத்திய ஆட்சியாக இருந்தாலும் எவ்வளவோ திட்டங்கள் எல்லாம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஓராண்டு காலத்தில் தொழிலாளர் நலனுக்காக எத்தனையோ சிறப்பான திட்டங்களைத் தீட்டி இருக்கிறோம்  தீட்டிக் கொண்டிருக்கிறோம்  இன்னும் தீட்டப்போகிறோம். என்னுடைய மனதிற்கு நிறைவான பணிகளாக இவை அமைந்திருக்கிறது. பணிநேரம் முழுவதும் நின்று கொண்டே பணியாற்றி வரும் தொழிலாளர்களது துயர் துடைக்க இருக்கை வசதியை ஏற்படுத்திக் கொடுத்த அரசு நம்முடைய அரசு. அமைப்பு சாரா வாரியத்தில் உறுப்பினராக இருக்கும் 500 மகளிருக்கு ஆட்டோ ரிக்‌ஷா வழங்கிட ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கியது நம்முடைய ஆட்சி. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தொழிலாளர்களுக்கு விபத்து உதவித் தொகையாக 1 லட்சம் ரூபாய் இருந்ததை 2 லட்சம் ரூபாய் ஆக்கியது திமுக ஆட்சிதான்.கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர்களுக்கு திருமண உதவித் தொகையாக இதுவரை ஆண்களுக்கு 3 ஆயிரம், மகளிருக்கு 5 ஆயிரம் என இருந்தது. அதனை அனைவருக்கும் 20 ஆயிரம் என உயர்த்தி வழங்க வேண்டும் என அறிவித்திருக்கிறோம். தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு வீட்டுவசதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.  6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் அமைப்பு சாராத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்த இருக்கிறது. இவ்வாறு ஏராளமான திட்டங்களை அறிமுகப்படுத்தி  அதையெல்லாம் உடனடியாக செயல்படுத்தி கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கு அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.ஏனென்றால் 90 ஆண்டுகளுக்கு முன்பே அனைவரும் ஒருவரை ஒருவர் ‘தோழர்’ என்று அழைக்கவேண்டும் என்று சொன்னவர் நம்முடைய ஈரோட்டுச் சிங்கம் தந்தை பெரியார். எனக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டினார் தலைவர் கலைஞர். எனது தலைமையிலான நமது அரசு, இது தோழர்களின் அரசாகத்தான் இருக்கும்  தொழிலாளர்களின் அரசாகத்தான் இருக்கும்  தொழிலாளர்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும் அரசாகத்தான் இருக்கும் என்று இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, இந்த மே தினப் பூங்காவில் தொழிலாளர்களின் சின்னமாக இருக்கும் இந்த மே தின நினைவுத் சின்னத்தை இங்கு அமைந்திருக்கிறோம் என்றால், இதனை அமைத்துத் தந்தவரும் தலைவர் கலைஞர் தான் என்பது உங்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் பேசினார்….

The post தொழிலாளர்களை வாழ்த்தும் அரசாக இல்லாமல் தொழிலாளர்களை வாழ வைக்கும் அரசாக திமுக அரசு விளங்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Govt ,G.K. Stalin ,Chennai ,Tamil Nadu ,May Day ,Memorial ,Pillar ,Chennai Sindhatirippettu Mae Day Park ,CM ,B.C. ,
× RELATED தமிழக அரசின் சீரிய திட்டமான இலவச...