×

குய்கோ விமர்சனம்

 

வேலூர் பகுதியில் மலை கிராமத்தைச் சேர்ந்த யோகி பாபு, அங்கு வசிக்கும் துர்காவைக் காதலிக்கிறார். ‘மாடு மேய்க்கிறவனுக்கு என் தங்கை கேட்குதா?’ என்று யோகி பாபுவை துர்காவின் அண்ணன் அடித்துவிடுகிறார். இதனால் கோபமடைந்து சவுதி அரேபியா செல்லும் யோகி பாபு, அங்குள்ள அரசரின் ஒட்டகங்களை மேய்த்து பெரும் செல்வந்தராகிறார். அப்போது அம்மா இறந்ததால் ஊருக்கு திரும்பும் யோகி பாபு, அம்மா மற்றும் ஊருக்கு என்ன செய்தார்? காதலியின் கரம்பிடித்தாரா என்பது ஒரு கதை. மலைக்கு கீழுள்ள கிராமத்தைச் சேர்ந்த கணக்கு வாத்தியார் விதார்த், சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் ேபாட்டியைப் பார்க்க, வட்டித்தொழில் செய்யும் முத்துக்குமாரிடம் ஆயிரம் ரூபாய் கடன் கேட்கிறார். அவரோ, மலை கிராமத்தில் இறந்து கிடக்கும் வயதான பெண்ணின் உடலை வைப்பதற்கு ஐஸ்பாக்ஸ் தேவை என்பதால், அதை எடுத்துக்கொண்டு செல்லும் வேனில் துணைக்கு சென்று வந்தால் பணம் கொடுப்பதாக சொல்கிறார். விதார்த்தும் கிராமத்துக்கு செல்கிறார். அங்கு கணக்கு என்றாலே கலங்கும் பிரியங்காவை சந்திக்கிறார். இவ்விரண்டு கதைகளை இணைத்து, காமெடி படத்தைக் கொடுத்துள்ளார் இயக்குனர் டி.அருள் செழியன். விஜய் சேதுபதி நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் கதாசிரியரான இவர், தற்போது இயக்குனராகி இருக்கிறார்.

கதையின் நாயகன் யோகி பாபு சவுதி ரிட்டர்னாக செய்யும் அலப்பறைகள் சிரிக்க வைக்கிறது. தன் அம்மாவை வைத்திருந்த ஐஸ்பாக்சையே கோயிலாக்கி, சென்டிமெண்டிலும் கவனம் ஈர்த்துள்ளார். ஆனால், நெகிழ்ச்சியாகச் சொல்ல வேண்டிய அம்மா சென்டிமெண்ட்டை காமெடியாக்கியது பொருந்தவில்லை. விதார்த்துக்கும், பிரியங்காவுக்கும் அதிக முக்கியத்துவம் இல்லை. எனினும், கணக்கே வராத பிரியங்கா, கணக்கில் புலியான விதார்த் என்ற காம்பினேஷன் சுவாரஸ்யமாக இருக்கிறது. கமிஷன் பேர்வழியாக வந்து இளவரசு கலகலப்பூட்டுகிறார். யோகி பாபு பேசும் சில வசனங்கள் சிரிக்க வைக்கின்றன. எதையும் உடனே காசாக்கி விடும் போலீசின் ஐடியாக்கள் அதிகமாக கவனம் பெறுகின்றன. பெட்டிக்கடை நடத்தும் பாட்டி, மாலை செய்தித்தாள் மறுநாள் காலை கிடைப்பது, பழங்கதை பேசும் பாட்டிகள் என்று, கிராமத்து சுவாரஸ்யங்கள் கலகலக்க வைக்கின்றன. பாடகரும், நடிகருமான அந்தோணி தாசன் இசையில் பாடல்கள் இனிமையாக இருக்கிறது. ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு, வேலூர் மலை களின் அழகை இயல்பாகவும், பசுமையாகவும் காட்டியுள்ளது. ஆங்காங்கே லாஜிக் மீறல்கள், நாடகத்தனமான சில காட்சிகள் இருந்தாலும், ‘குய்கோ’ சிரிக்க வைக்க தவறவில்லை.

The post குய்கோ விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Yogi Babu ,Vellore ,Durga ,Saudi Arabia ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED துர்க்கையின் நவ வடிவங்கள்!