×

கோத்தகிரி குஞ்சப்பனையில் காரை தாக்கிய காட்டுயானை: வனத்துறை எச்சரிக்கை

கோத்தகிரி: கோத்தகிரி குஞ்சப்பனையில் காட்டுயானை தாக்கி கார் சேதமானது. இதனால், சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பலாப்பழ சீசன் துவங்கியுள்ளது. பழங்களின் அரசன் எனும் பலா கொத்துக்கொத்தாக காய்த்து தொங்குகிறது. யானைகளுக்கு மிகவும் பிடித்த உணவாக பலா உள்ளது. இதனால், பலா வாசனையை நுகரும் காட்டுயானைகள் வனத்தைவிட்டு வெளியேறி பலா உள்ள இடங்களுக்கு படையெடுத்து வருகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மேட்டுப்பாளையம்- கோத்தகிரி நெடுஞ்சாலை குஞ்சப்பனை சோதனை சாவடி அருகே யானை கூட்டம் சென்றது. அதில் இருந்து பிரிந்த ஒற்றை பெண் காட்டுயானை பலாவை தேடி சாலையில் உலா வந்தது. அப்போது அந்த வழியே ஒரு கார் வந்தது. இதைப்பார்த்து காட்டுயானை ஆவேசமடைந்து காரை துதிக்கையால் தாக்கியது. இதில், காரின் முன்பக்கம் சேதமானது. இதனையடுத்து உஷாரான கார் டிரைவர் காரை பின்னால் இயங்கி தப்பினார். இதனால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. அதன்பின்னரும், அந்த யானை சாலையில் சுற்றியது. இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உடனே போக்குவரத்தை நிறுத்தினர். யானை குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் விரைந்து வந்தனர். கடும் போராட்டத்திற்கு பின்னர் யானையை வனத்துக்குள் விரட்டினர். வனத்துறையினர் தொடர்ந்து இந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,‘வாகன ஓட்டிகள் இந்த பகுதியில் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். சுற்றுலா பயணிகள் யானைகளை கண்டால் ஆர்வமிகுதியால் போட்டோ, செல்பி எடுக்க கூடாது’ என்று எச்சரித்துள்ளனர்….

The post கோத்தகிரி குஞ்சப்பனையில் காரை தாக்கிய காட்டுயானை: வனத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kotagiri Kunjappanai ,Kotagiri ,Kunjappanai, Kotagiri ,Nilgiris ,Kothagiri Kunjapanai ,Dinakaran ,
× RELATED கோத்தகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: தேயிலை மகசூல் அதிகரிப்பு