×

குறைந்த பட்சம் 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்-குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

தஞ்சை : தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். தஞ்சை எம்.பி., எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநர் ஜஸ்டின், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.கூட்டம் தொடங்கியதும், தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் தேர் விபத்தில் இறந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தட்டுப்பாடாக இருந்த யூரியா உள்ளிட்ட உரங்கள் தற்போது போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக விவசாயிகள் அளித்த புகாரின் பேரில் திடீர் ஆய்வு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மாவட்டத்தில் நான்கு தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது.தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் பணிகள் 170 இடங்களில் ரூ.21 கோடிக்கு நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் வரும் மே 31-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன்: மேட்டூர் அணை ஜூன் 12 ல் திறக்க வாய்ப்புள்ளதால் தூர்வாரும் பணியை மே மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும். பூதலூர் ஆனந்தகாவேரி வாய்க்காலில் 6 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள 7 குமிழிகளை சீரமைக்க வேண்டும்.திருவையாறு ரவிச்சந்திரன்: திருவையாறு பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதை சீரமைக்க வேண்டும். விவசாயப் பணிகள் தொடங்கியுள்ளதால் குறைந்தபட்சம் 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்குவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் கோவிந்தராஜ்: மழைக்காலத்தில் மழை நீரை வீணாக்காமல் காட்டுவாரியில் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டி தண்ணீரை சேமித்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதுகுறித்து மாவட்ட் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.சுவாமிமலை சுந்தரவிமல்நாதன்: கடந்தாண்டு சம்பா பருவத்தில் கனமழை பெய்தபோது தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடுத் தொகை விவசாயிகளுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. இதை விரைந்து வழங்க வேண்டும்.தமிழக விவசாய தொழிலாளர்கள் சங்கம் மாவட்ட துணை தலைவர் ஜீவக்குமார்: வரும் ஆண்டிற்கு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். கோடையில் குறுவை சாகுபடிக்கு நாற்றங்கால் உள்ளிட்ட சாகுபடி பணிகள் தொடங்குவதால் குறைந்தபட்சம் 16 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.பட்டுக்கோட்டை வீரசேனன்: கல்லணைக் கால்வாய் ஆற்றில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் சீரமைப்பு பணிகள் நடக்கிறது. கடந்தாண்டு பணிகள் தொடங்கிய போது தரமில்லை என விவசாயிகள் கூறியதன் பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தற்போதும் இந்த பணிகள் தரமில்லாமல் நடைபெறுகிறது. பணிகளை தரமாக செய்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்….

The post குறைந்த பட்சம் 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்-குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kuradir ,Thanjavur ,Grievance Redressal Day ,Thanjavur District Collector ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...