×

பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள்: ஒட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ கோரிக்கை

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை, வணிக வரி மற்றும் பதிவுத்துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் ஒட்டப்பிடாரம் சண்முகையா (திமுக) பேசியதாவது: ஒட்டப்பிடாரத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதித்துறை நீதிமன்ற கட்டிடம் கட்டி கொடுக்கப்பட வேண்டும். ஒட்டப்பிடாரத்தில் சார்பதிவாளர் கட்டிடம் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமைவாய்ந்த கட்டிடம் ஆகும். அங்கு புதிய கட்டிடத்தை அமைத்து கொடுக்க வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 1, 2, 3, 12, 13, 14, 56, 57, 58, 59வது வார்டுகளில் மழைநீர் வடிகால் வசதியும், பாதாள சாக்கடை வசதியும், சாலை, தெரு விளக்கு வசதிகளை போர்க்கால அடிப்படையில் செய்து தர வேண்டும். கோரப்பள்ளம் குளம் மொத்தம் 1,500 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அந்த குளத்தை தூர் வாரினால் 2,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதிபெறும். குளையன்கரிசல் குளத்தை தூர் வாரினால் 1000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதிபெறும். தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். தாமோதியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும். தாமிரபரணி ஆற்றில் மருதூர் அணைக்கட்டு அருகே நீரேற்று நிலையம் மூலம் வடக்கு காரசேரி, சிங்கத்தாகுறிச்சி, ஆலந்தா, பூவாணி, செக்காரக்குடி, தெய்வச்செயல்புரம், புதுக்கோட்டை பகுதிகளுக்கு நீரேற்று நிலையம் மூலம் புதிய வெள்ளநீர் வரத்து காய்வாய் அமைத்து கொடுக்க வேண்டும். ஒட்டப்பிடாரத்தை மையமாக கொண்டு அரசு போக்குவரத்து பணிமனை அமைத்து கொடுக்க வேண்டும். கலைஞர் பெயரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்து தர வேண்டும்.பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரபாண்டியன் கட்டபொம்மன் கோட்டைக்கு சுற்றுலா பயணிகள் அதிகம்பேர் வருவதால், அங்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் இலவச வீட்டுமனை ஒப்படைப்பு பட்டா வழங்குவற்கு உள்ளூர் திட்ட குழுமம் திட்டத்தின் கீழ் வருவாய்துறை, தூத்துக்குடி நகரத்தில் இருந்து 16 கி.மீ. சுற்றளவிற்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கூடாது என்று தடையாணை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இதனால் 20 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும். எனது தொகுதி கடலோர பகுதியாக இருப்பதால், உள்ளூர் நீராதாரம் மூலம் குடிநீர் இல்லை. கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டும் கிடைக்கிறது. இதனால், குடிநீர் பிரச்னை ஏற்படுகிறது. ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் 50 லட்சம் லிட்டர் கூட்டு குடிநீர் திட்டம் அமைத்து தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்….

The post பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள்: ஒட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Veerapandiya Kattabomman fort ,Panjalankurichi ,Ottapidaram ,DMK MLA ,CHENNAI ,Tamilnadu ,Legislative Assembly ,
× RELATED தூத்துக்குடி மாவட்டம்...