×

சந்தேகத்திற்கிடமான வகையில் காவல் நிலையத்தில் மரணமடைந்த விக்னேஷ் குடும்பத்துக்கு ரூ.10லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று எடப்பாடி பழனிசாமி (எதிர்க்கட்சி தலைவர்), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), முகமது ஷாநவாஸ் (விசிக), சின்னதுரை (மார்க்சிஸ்ட்), ராமச்சந்திரன் (இந்திய கம்யூ.), ஜவஹிருல்லா (மமக), வேல்முருகன் (தவாக) ஆகியோர், தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் விக்னேஷ் மரணம் அடைந்தது குறித்து சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர்.இதற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சென்னை, பட்டினப்பாக்கம் பகுதியை சார்ந்த சுரேஷ், விக்னேஷ் ஆகிய இருவரும் வந்த ஆட்டோவை கெல்லீஸ் அருகிலே காவல் துறையினர் நிறுத்தி இருக்கிறார்கள்.  கஞ்சா போதையில் இருந்த அவர்களை காவல் துறையினர் விசாரித்தபோது, சரியான பதில் சொல்லாத காரணத்தால், வாகனத்தையும், அவர்களையும் சோதனையிட்டிருக்கிறார்கள். அப்படி சோதனையிட்டபோது, அவர்களிடம் கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்திருக்கிறது. பிறகு அவர்களை காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்திருக்கிறார்கள்.  ஆனால், விக்னேஷ் என்பவர் காவல் துறையினருடன் வர மறுத்திருக்கிறார். மறுத்தது மட்டுமல்ல, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவல் துறையினரை தாக்க முயற்சித்திருக்கிறார். அதை சமாளித்து, இருவரையும் போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, ஆட்டோவில் இருந்த கஞ்சா மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இவர்களின் பின்புலத்தை ஆய்வு செய்தபோது, சுரேஷ் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 11 வழக்குகளும், விக்னேஷ் மீது ஏற்கெனவே 2 கன்னக்களவு வழக்குகளும் இருப்பது தெரிய வந்திருக்கிறது.19-4-2022 அன்று காலை, இருவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டிருக்கிறது. காலை உணவு சாப்பிட்டபின், விக்னேஷ்க்கு திடீரென்று வாந்தி, வலிப்பு வந்திருக்கிறது. உடனே அருகில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்த நிலையில் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.இந்த வழக்கு சந்தேக மரண வழக்காக பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் உள்ள நிலையில், தலைமை செயலக காலனி காவல் நிலைய உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்க்காவல் படை காவலர் தீபக் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.  மேலும், காவல் துறை இயக்குநர் அவர்கள் மேல் விசாரணைக்காக இந்த வழக்கினை கடந்த 24ம் தேதி சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்து உத்தரவிட்டிருக்கிறார். ஆகவே, விக்னேஷ் மரணம் தொடர்பாக சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும் முறையாக அரசு எடுத்து வருகிறது. அடுத்து, இதுகுறித்து சில கோரிக்கைகளை உறுப்பினர்கள் எடுத்து வைத்திருக்கிறீர்கள். எனவே, உறுப்பினர்கள் தெரிவித்திருக்கக்கூடிய அந்த கருத்துக்களை தொடர்ந்து, வழக்கினுடைய முடிவுகள் எப்படியிருந்தாலும், மனிதாபிமான அடிப்படையில் உயிரிழந்த விக்னேஷ் குடும்பத்தினுடைய ஏழ்மை நிலையை கருத்தில்கொண்டு உடனடியாக ரூ.10 லட்சம்  நிவாரணம் வழங்கப்படும்.  அதே அடிப்படையில், சுரேஷ்  உயர் சிகிச்சைக்கான செலவையும் அரசே ஏற்கும். இவ்வாறு அவர் கூறினார்.* திமுக ஆட்சியில் கடைக்கோடி மனிதனுக்கும் நீதி கிடைக்கும்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திமுக, காவல் மரணங்கள் தீர விசாரிக்கப்பட்டு, அது  எவ்வாறானதாக இருந்தாலும், அந்நிகழ்வில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட  வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றது. அதே வகையில், இந்த வழக்கும் முறையாக விசாரிக்கப்பட்டு, கடைக்கோடி மனிதனுக்கும், அவர்களின் மனித உரிமை காக்கப்பட்டு, உரிய நீதி கிடைத்திட இந்த அரசும், திமுகவும் என்றைக்கும் துணை நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.’’ இவ்வாறு அவர் பேசினார்….

The post சந்தேகத்திற்கிடமான வகையில் காவல் நிலையத்தில் மரணமடைந்த விக்னேஷ் குடும்பத்துக்கு ரூ.10லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Vignesh ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,Legislative ,Assembly ,Edappadi Palaniswami ,Leader of ,Selvaperunthakai ,Congress ,G.K.Mani ,Bamaka ,Mohammad Shahnawaz ,Visika ,Chinnadurai ,M.K. .Stalin ,
× RELATED கனமழை எச்சரிக்கை; திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்