×

நாடு முழுவதும் வெறுப்புணர்வு வெறி காதில் கேட்காதது போல் மவுனமாக இருப்பது ஏன்?..மோடிக்கு 100க்கும் மேற்பட்ட ஐஏஎஸ்க்கள் கடிதம்

புதுடெல்லி:  பாஜ தலைமையிலான அரசில் கடைப்பிடிக்கப்படும் வெறுப்பு அரசியலை நிறுத்தும்படி நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். நாடு முழுவதும் குறிப்பாக பாஜ ஆளும் மாநிலங்களில் வெறுக்கத்தக்க பேச்சு, அரசியல் பரப்பப்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனை நிறுத்தும்படியும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், டெல்லி முன்னாள் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், முன்னாள் வெளியுறவு செயலர் சுஜாதா சிங், முன்னாள் உள்துறை செயலர் ஜிகே. பிள்ளை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மை செயலாளர் டிகேஏ. நாயர் உள்ளிட்ட 108 முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் வெறுப்பு நிறைந்த அழிவின் வெறித்தனத்தை பார்க்கிறோம். இதில் பலியாவது முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகத்தினர் மட்டுமல்ல; நாட்டின் அரசியலமைப்பு சட்டமும் தான்.முன்னாள் அரசு ஊழியர்களாகிய நாங்கள், இதனை தீவிரமான வார்த்தைகளில் வெளிப்படுத்த விரும்புவதில்லை. ஆனால், நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு கட்டிடம் வேகமாக அழிக்கப்படுவதை பார்த்து கொண்டு, கோபத்தையும் வேதனையையும் வெளிப்படுத்த தூண்டபட்டுள்ளோம். அசாம், டெல்லி, குஜராத், அரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய பல மாநிலங்களில் கடந்த சில வருடங்களாகவும், சில மாதங்களாகவும் சிறுபான்மை சமூகங்கள், குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதனால், அச்சுறுத்தும் அதிகாரம் புதிய பரிமாணம் அடைந்துள்ளது. இந்த சமூக அச்சுறுத்தல் உங்கள் காதுகளுக்கு கேட்காதது போல மவுனமாக இருக்கிறீர்கள். “சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்” என்ற உங்களது வாக்குறுதியை மனதில் இருத்தி உங்கள் மனசாட்சிக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post நாடு முழுவதும் வெறுப்புணர்வு வெறி காதில் கேட்காதது போல் மவுனமாக இருப்பது ஏன்?..மோடிக்கு 100க்கும் மேற்பட்ட ஐஏஎஸ்க்கள் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Modi ,New Delhi ,IAS ,Baja ,led government ,Dinakaran ,
× RELATED ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு...