×

வீடு ஆக்கிரமிப்பை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி: தடுத்து நிறுத்திய போலீசார்

திருவள்ளூர்: பக்கத்து வீட்டுக்காரர் தன்னுடைய வீட்டை ஆக்கிரமிப்பு செய்ததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்த போலீசார் விரைந்து செயல்பட்டு அவரது கையில் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பறித்து சமாதானம் செய்தனர். திருவள்ளூரை அடுத்த திருத்தணி அருகே உள்ள புச்சிரெட்டி பள்ளி காலனியை சேர்ந்தவர் அமுலு (40). பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கடந்த சில மாதங்களாக அவரது வீட்டை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்து வருகிறார். இதனால் அமுலுவுக்கும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது. இது தொடர்பாக அவர் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்  வீட்டை ஆக்கிரமிப்பு செய்து அந்த இடத்தில் கட்டுமானப் பணியை மேற்கொண்டுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அமுலு நேற்று திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் உள்ளே வந்தவுடன் தான் ஏற்கனவே மறைத்துக் கொண்டு வந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து  தன் உடலில் ஊற்றிக் கொண்டார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து செயல்பட்டு அவர் கையில் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பறித்து அவரை சமாதானம் செய்தனர். பிறகு அவரை உடனடியாக திருவள்ளூரில் உள்ள நகர காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை செய்து இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர். இதனால் மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில் பெண் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது….

The post வீடு ஆக்கிரமிப்பை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி: தடுத்து நிறுத்திய போலீசார் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...