×

2021-2022 நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 668 பில்லியன் டாலராக உயர்ந்து சாதனை: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு

சென்னை: தாம்பரம் சானடோரியத்தில் உள்ள ‌மெப்ஸ் சிறப்பு ‌பொருளாதார மண்டலத்தில், கடந்த 2019-20ம் ஆண்டில் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று காலை மெப்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஏற்றுமதி தொழிலில் சிறந்து விளங்கிய  129 ஏற்றுமதியாளர்களுக்கு சிறப்பு விருதுகளை வழங்கினார். பின்னர், அவர் பேசுகையில், ‘‘ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் திட்டங்களின்கீழ் செயல்படும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்குவதை எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். பழம்பெரும் தமிழ் புலவரான அவ்வையார் ‘கொன்றை வேந்தன்’ என்ற நூலை எழுதியுள்ளார். அதில், அவர் ‘திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு’ எனக் குறிப்பிட்டுள்ளார். அதற்கு , ‘கடல் கடந்து சென்றாவது செல்வத்தைச் சேருங்கள்’ என்பது பொருள் ஆகும். அந்நியச் செலாவணியைப் பெறுவதிலும், நமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும், நாட்டைக் கட்டமைப்பதிலும் ஏற்றுமதியாளர்களாகிய நீங்கள் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள். சமீபகாலமாக நம் நாட்டில் ஏற்றுமதி பன்மடங்கு உயர்ந்துள்ளது. விருது பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.கடந்த 2021-22ம் நிதியாண்டில், இந்தியாவின் வர்த்தக ஏற்றுமதி, இதுவரை இல்லாத சாதனை அளவாக 418 பில்லியன், சேவைகள் ஏற்றுமதி 250 பில்லியன் என இரண்டும் இணைந்து 668 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இருந்தது. இது, கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில் குறிப்பிடத்தகுந்த சாதனையாகும். இவ்வாறு அவர் பேசினார். இவ்விழாவில், ஒன்றிய வர்த்தக மற்றும்  தொழில்துறை இணை அமைச்சர் அனுபிரியாசிங் படேல், தமிழக  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்  கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மெப்ஸ் பொருளாதார மண்டல மேம்பாட்டு ஆணையர்  சண்முகசுந்தரம் ஐஏஎஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post 2021-2022 நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 668 பில்லியன் டாலராக உயர்ந்து சாதனை: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு appeared first on Dinakaran.

Tags : India ,Vice President ,Venkaiah Naidu ,Chennai ,RMEPs Special Economic Zone ,Dambaram ,Sanatorium ,Venkaya Naidu ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு பூ மார்க்கெட் நாளை இயங்கும்