×

அகில இந்திய காவல்துறை அதிகாரிகள் அறிவியல் மாநாட்டில் செஞ்சி பெண் டிஎஸ்பியின் நவீன தொழிநுட்ப ஆராய்ச்சி கட்டுரை: காவல்துறை அதிகாரிகள் பாராட்டு

சென்னை: அகில இந்திய காவல்துறை அதிகாரிகள் அறிவியல் மாநாட்டில் செஞ்சி பெண் டிஎஸ்பியின் நவீன தொழிநுட்ப ஆராய்ச்சி கட்டுரையை காவல்துறை அதிகாரிகள் பாராட்டினர். ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மத்திய காவல் ஆராய்ச்சி மையத்தால் ஒவ்வொரு வருடமும், அகில இந்திய காவல்துறை அதிகாரிகளின் அறிவியல் மாநாடு நடத்தப்படும். அந்த வகையில் இந்த வருட மாநாடு, மத்திய பிரதேச மாநிலத்தலைநகரான போபாலில், கடந்த 22ம் தேதி தொடங்கியது. இந்த இரண்டு நாள் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காவல் நிலையங்களில் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்து, அதன் மூலம் காவல் நிலைய வன்முறைகள், விதிமுறை மீறல்களை தடுப்பது குறித்தும் அறிவுறுத்தினார். இந்திய அளவில் பல காவல்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், பல ஆராய்ச்சி கட்டுரைகளும் சமர்பிக்கப்பட்டு விளக்கப்பட்டன. அதில் தமிழகத்தில் இருந்து, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி ஆறுமுகசாமி கலந்து கொண்டு, தடயவியல் மற்றும் புலன் விசாரணைத்துறையில் செயற்கை நுண்ணறிவு விசாரணையின் பங்களிப்பு என்ற தலைப்பில், குற்றவாளிகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நபர்களின் விழித்திரைகளை கேமரா மூலம் கண்காணித்து, அவர்கள் கூறும் தகவல்கள் உண்மை தானா என்பதைக் கண்டறியும் புதிய வகை ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து பேசினார். அப்போது சில உலக நாடுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும், இந்த விழித்திரை புலன் விசாரணை தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தையும், அதை இந்தியாவில் அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் விளக்கிய அவர், அதன் மூலம் காவல்துறைக்கு ஏற்படும் கால தாமதத்தை குறைப்பது பற்றியும், தற்போது நடைமுறையில் உள்ள டி.என்.ஏ. போன்ற சோதனை முறைகளால் ஒரு வழக்கிற்கு ஆகும் செலவினத்தை குறைப்பது பற்றியும் விளக்கினார். மேலும் இந்த விழித்திரை புலன் விசாரணை மூலம் செலவில்லாமலும், கால தாமதமில்லாமலும் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட முடியும் என்பதையும், அதற்காக இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள் குறித்தும் விளக்கினார். இவரின் கருத்துகளை ஏற்றுக் கொண்ட காவல்துறை உயரதிகாரிகள், தற்போது உள்ள சூழலில் இது அவசியமான ஒன்று தான் என்று தங்கள் கருத்துக்களை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், அவரது ஆய்வுக் கட்டுரையை பாராட்டியும் பேசினர்.இந்த கருத்தரங்கு , மத்திய பிரதேச முதலமைச்சர் மற்றும் ஆளுநர் ஆகியோர் முன்னிலையில் நேற்று முன் தினம் மாலை நிறைவடைந்தது….

The post அகில இந்திய காவல்துறை அதிகாரிகள் அறிவியல் மாநாட்டில் செஞ்சி பெண் டிஎஸ்பியின் நவீன தொழிநுட்ப ஆராய்ச்சி கட்டுரை: காவல்துறை அதிகாரிகள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Senchi Pend ,All India Police Officers Science Conference ,Chennai ,Redchi ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...