×

அரசு திட்டங்கள் கடை கோடி மக்களையும் சென்றடைய நடவடிக்கை: சிறப்பு கிராமசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் செங்காடு ஊராட்சியில் இன்று சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது தமிழக அரசு திட்டங்கள் கடை கோடி மக்களையும் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் அடங்கிய செங்காடு ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார். இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலு, எம்எல்ஏ செல்வபெருந்தகை, காஞ்சி மாவட்ட குழு தலைவர் படப்பை மனோகரன், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக்குழு தலைவர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கிராமசபை கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, அங்கு கூடியிருந்த ஏராளமான மக்களிடையே கலந்துரையாடினார். மேலும், அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செங்காடு ஊராட்சியில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மக்கள் தெரிவித்த பல்வேறு குறைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், அங்கு மகளிர் சுயஉதவி குழுவினரின் கைவினை பொருட்களின் கண்காட்சியை பார்வை யிட்டார்.இந்தநிகழ்வில் முதல்வர் மக்களிடம் கலந்துரையாடினார். அப்போது முதல்வர் கூறியதாவது: மக்களின் குறைகளை கேட்டு அதை சரி செய்யத்தான் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகால  ஆட்சியில் கிராமசபை கூட்டங்கள் முக்கியத்துவம் தரப்படவில்லை. ஏற்கனவே  நான்கு முறை கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டது. அதை சரியாக நடத்தப்படவில்லை. தற்போது கிராமசபை கூட்டங்களை முறைப்படுத்த நாங்கள்  முயற்சி செய்து கொண்டு வருகிறோம். அதனால் ஆண்டுக்கு 6 முறை கிராம சபை  கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என தற்போது சட்டப்பேரவையில் நான்  அறிவித்துள்ளேன். அரசு மருத்துவமனைக்கு இப்பகுதியில் உள்ள மக்கள்  அதிக எண்ணிக்கையில் டயாலஸிஸ் செய்து கொள்ள சென்றுள்ளனர். இதையடுத்து  மருத்துவமனை சார்பில் களத்திற்கு நேரில் சென்று மக்களின் மாதிரிகள்  பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சுமார் 288 பேருக்கு மாதிரிகள்  சேகரிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளால் காற்று, நீர் மாசு ஏற்பட்டுள்ளதா  என்பது குறித்து கடந்த டிசம்பர் மாதம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. காற்று  மற்றும் நீரின் தரம் அங்கீகரிக்கப்பட்ட அளவுகளிலேயே இருப்பதாக ஆய்வின்  முடிவில் தெரியவந்துள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க  வலியுறுத்துகிறேன். 2 கி.மீ நடந்து சென்று ரேசன் பொருட்கள் வாங்க  வேண்டியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். மேலும் இப்பகுதியில் இயங்கும்  தெர்மாகோல் நிறுவனத்தால் காற்று மற்றும் நீர் மாசுபாடு ஏற்பட்டுள்ளதா  என்பது குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு திட்டங்கள் கடை கோடி மக்களையும் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் கூறினார். இதில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய  செயலாளர் கோபால், மாவட்ட கவுன்சிலர்கள் பாலா, ராமமூர்த்தி, மாவட்ட துணை  அமைப்பாளர்கள் பொடவூர் ரவி, செந்தில்தேவராஜன், முருகன், ஜார்ஜ்,  ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் சாந்தி சதிஷ்குமார், துணை தலைவர்  இந்திராணி சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post அரசு திட்டங்கள் கடை கோடி மக்களையும் சென்றடைய நடவடிக்கை: சிறப்பு கிராமசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Special ,Graduate Meeting ,G.K. Stalin ,Sripurudur ,Chengadu Uradi ,Sripurudur Union ,Tamil Nadu ,Chief President of ,B.C. ,
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...