×

பிரமாண்ட குழிகளை தோண்டி புதைத்த ரஷ்ய படைகள் ஒரே இடத்தில் 9,000 சடலம்

கீவ்: உக்ரைனின் மரியுபோல் நகரை கைப்பற்றிய ரஷ்ய படை, அங்கு பொதுமக்கள், உக்ரைன் வீரர்கள் என 9,000 பேரை கொன்று, போர் குற்றத்தை மறைக்க, சடலங்களை ஒரே இடத்தில் கொத்து கொத்தாக புதைத்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய ராணுவம், கெர்சன் நகரை தொடர்ந்து மரியுபோல் நகரை கைப்பற்றி விட்டதாக நேற்று முன்தினம் அறிவித்தது. 2 மாத தாக்குதலில் சின்னாபின்னமான மரியுபோல் நகரம் தற்போது முற்றிலும் ரஷ்ய படையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போரில் ரஷ்யாவுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி இது. ஏற்கனவே ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியா பகுதியில் இருந்து தரைவழியாக மரியுபோல் நகரை இணைக்க முடியும். இந்நிலையில், 2 மாதமாக முற்றுகையிட்டிருந்த மரியுபோலிலும் கடுமையான போர் குற்றங்களை ரஷ்ய படையினர் செய்துள்ளதற்கான ஆதாரங்கள் அம்பலமாகி உள்ளன. மேக்ஸர் டெக்னாலஜிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செயற்கைகோள் புகைப்படத்தில், மரியுபோல் அருகே உள்ள மன்ஹஸ் நகரில் சுமார் 200 இடங்களில் பெரிய குழிகள் வெட்டப்பட்டு அங்கு சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பது காட்டப்பட்டுள்ளது. இப்புகைப்படங்களை ஆராய்ந்து, மரியுபோல் நகர கவுன்சில் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இது குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. அதில், புச்சா பகுதியில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய புதைகுழிகளை விடவும் 20 மடங்கு பெரிய புதைகுழிகள் மன்ஹஸ் பகுதியில் இருக்கலாம் என்றும், மரியுபோலில் ஏப்ரல் மாதம் முழுவதும் ரஷ்ய படைகள் மிகப்பெரிய பள்ளங்களைத் தோண்டி அதில் உக்ரைன் மக்களின் உடல்களை நிரப்பி மூடியதாகவும் குறிப்பிட்டுள்ளது. 85 மீட்டர் நீளம் கொண்ட நான்கு புதைகுழிகள் தோண்டப்பட்டு மூடப்பட்டிருப்பது செயற்கைக்கோள் புகைப்படம் வாயிலாக தெரிய வந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மரியுபோல் மேயர் பாய்சென்கோ கூறுகையில், ‘‘ரஷ்யா தனது போர் குற்றங்களை மறைக்க கொல்லப்பட்ட மக்களின் சடலங்களை குவியல் குவியலாக புதைத்துள்ளது’’ என்றார். சுமார் 9,000 சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இவற்றை லாரிகளில் குப்பை போல் கொண்டு வந்து, பெரிய குழிகளில் போட்டு புதைத்தனர் என்றும் மரியுபோல் நகர நிர்வாக அதிகாரிகள்கூறி  உள்ளனர். இந்நகரில் 2 மாதமாக மக்கள் பெரும்பாலும் வீடுகளின் அடித்தளத்திலேயே மறைந்து வாழ்ந்து வந்தனர். சமீபநாட்களாக மரியுபோல் நகரை விட்டு வெளியேற மக்களை ரஷ்ய ராணுவம் அனுமதிக்கவில்லை. மக்களை வெளியேற்ற செஞ்சிலுவை சங்கம் மேற்கொண்ட முயற்சிகளையும் ரஷ்யா தடுத்தது.அதே சமயம், மரியுபோல் இன்னும் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக அந்நகர மேயர் பாய்சென்கோ கூறி உள்ளார். மரியுபோலில் மட்டும் 20,000 பொதுமக்களை ரஷ்யா கொன்று குவித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மரியுபோலை கைப்பற்றியதைத் தொடர்ந்து அடுத்ததாக கிழக்கு உக்ரைனான டான்பாஸை முழுமையாக கைப்பற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. இதே போல,  நேற்று கார்கிவ் நகரிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஐநா கடும் எச்சரிக்கை: உக்ரைன் போரில் ஐநா மனித உரிமை சட்டங்கள் கடுமையாக மீறப்படுவதாக ஐநா மனித உரிமைகள் தலைவர் மிச்செல் பச்லெட் குற்றம்சாட்டி உள்ளார். அவர் விடுத்த அறிக்கையில், ‘ரஷ்ய ஆயுதப் படைகள்  மருத்துவமனைகள், பள்ளிகள், குடியிருப்புகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி பொதுமக்களைக் கொன்று வருகிறது.  போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 5,264 பொதுமக்கள் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மரியுபோல் நகரங்களில் கணக்கெடுப்பு நடத்தும்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். இந்த 8 வார போரில் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் வெறுமனே புறக்கணிக்கப்படவில்லை, அவை அப்பட்டமாக காலில் போட்டு நசுக்கப்பட்டுள்ளன’ என எச்சரித்துள்ளார்.24 கி.மீ நீள சுரங்கப்பாதை, பதுங்கு குழிமரியுபோலில் உள்ள மிகப்பெரிய இரும்பு உருக்காலையில் சுமார் 1,000 பொதுமக்களும், 2000 உக்ரைன் வீரர்களும் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆலையை கைப்பற்ற கடந்த சில நாட்களாக ரஷ்ய ராணுவம் போரிட்டது. அங்கு பதுங்கு குழிகளை அமைத்து உக்ரைன் ராணுவ வீரர்கள் கடுமையாக தாக்குவதால் ரஷ்ய படையால் இன்னும் இந்த ஆலையை கைப்பற்ற முடியவில்லை. ஆனாலும், அடுத்த சில நாட்களில் உணவு, தண்ணீர் இல்லாமல் பதுங்கி இருக்கும் வீரர்கள் வெளியே வருவார்கள் என்றும், 3-4 நாளில் ஆலை ரஷ்யா கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும் என்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு கூறி உள்ளார். ஆலையில் இருந்து ஒரு ஈ கூட தப்பிக்கக் கூடாது என அதிபர் புடின் கடுமையாக உத்தரவிட்டுள்ளார். இந்த ஆலை 11 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. இதில் 24 கிமீ தொலைவுக்கு சுரங்கப்பாதையும், பதுங்கு குழிகளும் அமைத்து உக்ரைன் வீரர்கள் போரிட்டு வருகின்றனர்.ரூ. 6,000 கோடி ஆயுத உதவி: அமெரிக்க அதிபர் அறிவிப்பு: உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுத உதவி செய்து வரும் அமெரிக்கா, மேலும், ரூ.6,000 கோடிக்கு ஆயுதங்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. * 1.44 லட்சம் வெடிபொருட்கள், டிரோன்கள் உட்பட பல்வேறு ஆயுதங்களை வழங்குவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். * உக்ரைனுக்கு அமெரிக்கா இதுவரை ரூ.25 ஆயிரம் கோடிக்கு ஆயுதம், மனிதாபிமான உதவிகளை செய்துள்ளது. * உக்ரைனுக்கு உதவ அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த ரூ.25 ஆயிரம் கோடி நிதியில், பெரும்பாலான தொகைக்கான உதவிகள் செய்யப்பட்டு விட்டதாக பைடன் தெரிவித்துள்ளார். * ஜெர்மனியும் தனது பேண்சர்ஹாபிட்ஸ்-2000 டாங்கிகளை உக்ரைனுக்கு வழங்க கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. * உக்ரைனின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மாதம் ரூ.50 ஆயிரம் கோடி தேவை என கூறி உள்ள ஜெலன்ஸ்கி, ரஷ்யா உடனான உறவை அனைத்து உலக நாடுகளும் உடனடியாக துண்டிக்கவும் வலியுறுத்தி உள்ளார்.அமெரிக்க துணை அதிபர் கமலாவுக்கு ரஷ்யா தடை: உக்ரைன் போரால் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன. குறிப்பாக, ரஷ்ய அதிபர் புடின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு பதிலடியாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ரஷ்யாவில் நுழைவதற்கு ரஷ்யா நேற்று தடை விதித்தது. கமலா ஹாரிஸ், மெட்டா நிறுவன சிஇஓ மார்க் ஜூகர்பெர்க் உள்ளிட்ட 27 அமெரிக்க விஐபிக்களுக்கு ரஷ்யா தடை விதித்தது….

The post பிரமாண்ட குழிகளை தோண்டி புதைத்த ரஷ்ய படைகள் ஒரே இடத்தில் 9,000 சடலம் appeared first on Dinakaran.

Tags : Kiev ,Mariupol, Ukraine ,
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...