×

ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் கோயிலில் தேர் திருவிழா

ஸ்ரீ பெரும்புதூர்: ஸ்ரீ பெரும்புதூர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ  ஆதிகேசவப்பெருமாள் மற்றும் ஸ்ரீ ராமானுஜர் ஆகிய கோயில்கள் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இக்கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் கடந்த 16ம் தேதி கொடியேற்றம் மற்றும் கணபதி பூஜையுடன் துவங்கியது. முதல் 10 நாட்கள் நடந்த பிரம்மோற்சவத்தில் சிம்மம், சேஷம், ஹம்சவாகனம், தங்க பல்லக்கு, யாழி, யானை உள்பட பல்வேறு வாகனங்களில் மலர் அலங்காரத்தில் ஸ்ரீ  ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவியுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான நேற்று தேர்த் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து காந்தி சாலை, திருவள்ளூர் சாலை, சின்னகடை தெரு வழியாக இழுத்து சென்றனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், நித்ய கல்யாண பெருமாள் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதைதொடர்ந்து, 7ம் நாளான நேற்று ஸ்ரீ தேவி, பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி, நித்ய கல்யாண பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தந்தார். பக்தர்கள், கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு தேரை வடம் பிடித்து கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மாட வீதி வழியாக இழுத்து சென்றனர். இதில், உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை செயல் அலுவலர் குமரன் செய்ந்தார். மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில், எஸ்ஐ விஜயகுமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில் மாமல்லபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை புறநகர் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு தேவி ஸ்ரீ எல்லையம்மன் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி ஸ்ரீ எல்லையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. விழாவில் ஊத்துக்காடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.அம்மன் சிலை கண்டெடுப்பு: வாலாஜாபாத் அடுத்த பழைய சீவரம் பாலாற்று பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி குட்டை போல காட்சியளிக்கிறது. இங்கு சுற்று வட்டார கிராம மக்கள், மீன் பிடித்தல், துணி துவைப்பது, குளிப்பது ஆகிய பணிகளை செய்கின்றனர். இதையொட்டி, நேற்று சிலர், தாழ்வான பகுதியில் தேங்கிய தண்ணீரில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, மீன் வலையை எடுக்க சென்றபோது, அவர்களது கால்களில் பாறை போன்று தட்டுப்பட்டது. இதையடுத்து அவர்கள், மூழ்கி கிடந்த பாறையை எடுத்து கரை கொண்டு வந்து பார்த்தபோது, அம்மன் கற்சிலை என தெரிந்தது.தகவலறிந்து வாலாஜாபாத் தாசில்தார் லோகநாதன், பழைய சீவரம் விஏஓ லோகநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று, கற்சிலையை கைப்பற்றி வாலாஜாபாத் தாலுகா அலுவலகம் கொண்டு சென்றனர். அந்த கற்சிலை, எந்த நூற்றாண்டை சேர்ந்தது, எப்படி அங்கு வந்தது என விசாரிக்கின்றனர். இன்று, காஞ்சிபுரம் தொல்லியல் துறை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது….

The post ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் கோயிலில் தேர் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Cheru festival ,Sri Adhikesavapurumal Temple ,Sri Adikesavaperumal ,Sri Ramanujar ,Sri Muthur ,
× RELATED தஞ்சை களிமேடு தேர் திருவிழாவில்...