×
Saravana Stores

ஆற்றுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாத பழமையான கல்பாலம்-தட்டுத் தடுமாறி செல்லும் பொதுமக்கள்

நெல்லை : குறுக்குத்துறை தாமிரபரணி  ஆற்றங்கரையில் இருந்து கல்மண்டபத்துக்கு செல்லும் கல்பாலம் வெள்ளத்தால்  அடித்து செல்லப்பட்டு பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாத நிலையில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் தட்டுத் தடுமாறி செல்வதாக புகார் எழுந்துள்ளது. வற்றாத ஜீவநதியாம் தன்பொருநை எனப்போற்றப்படும் நெல்லை தாமிரபரணி நதிக்கரையில் சிவன், பெருமாள் கோயில்கள் ஏராளமாக உள்ளன. இதேபோல் தாமிரபரணி நதிக்கரையிலும், ஆற்றில் உள்பகுதியிலும் அதிகப்படியான பழமையான கல்மண்டபங்கள் அமைந்துள்ளன. இதில் ஆற்றுக்குள் அமைந்துள்ள கல்மண்டங்களுக்கு பொதுமக்கள், முதியவர்கள் செல்ல வசதியாக கல்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  அந்தவகையில் நெல்லை குறுக்குத்துறை படித்துறை இசக்கி அம்மன் கோயில் பகுதியில் இருந்து தாமிரபரணி ஆற்றில் அமைந்துள்ள கல்மண்டங்களுக்கு செல்ல பொதுமக்கள் பழமையான கல்பாலங்களைப் பயன்படுத்தி வந்தனர். இந்த கல்பாலத்தில் நடந்து வந்தால் தண்ணீரில் இறங்காமல் குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோயிலுக்கு வந்துவிடும் வகையில் கல்பாலம் அமைந்துள்ளது. இந்த கல்பாலத்தில் நடந்துசென்று பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவும், தை, ஆடி, மகாளய அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கல்மண்டபங்களை ஆற்றில் குளிக்க வரும் பெண்கள் தங்கள் உடைகளை மாற்றவும் பயன்படுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக பெய்த பருவமழையால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கல்பாலங்கள் அடித்து செல்லப்பட்டது. மேலும் கல் மண்டபம் முழுவதும் செடிகள் வளர்ந்து புதர் மண்டி இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. பல மாதங்களாக கல்பாலம் சிதிலமடைந்து காணப்படுவதால் ஆற்றில் குளிக்கச் செல்லும் முதியவர்கள், சிறுவர்கள் தண்ணீரில் இறங்கி பாதுகாப்பற்ற நிலையில் குளிக்கச் செல்கின்றனர்.   எனவே பொதுமக்கள் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு ஆற்று வெள்ளத்தால் சேதமடைந்த கல்பாலத்தையும், சிதிலமடைந்த கல் மண்டபத்தையும் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்….

The post ஆற்றுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாத பழமையான கல்பாலம்-தட்டுத் தடுமாறி செல்லும் பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Nellai ,Thamirabarani ,Kalmandapath ,
× RELATED நெல்லையில் கலைஞருக்கு சிலை வைக்க தீர்மானம் நிறைவேற்றம்..!!