×

ரூ.1.68 கோடி மோசடி வழக்கில் கோர்ட்டில் ஆஜராகி விட்டுச் சென்ற நிதிநிறுவன அதிபர் காருடன் கடத்தல்: சிவகங்கையில் பரபரப்பு

சிவகங்கை: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் தர்மராஜ் (41). நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் 6 மாதத்தில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறினார். இதை நம்பி சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் ரூ.1 கோடியே 68 லட்சம் வரை முதலீடு செய்தனர். ஆனால் பணம் திரும்ப கிடைக்கவில்லை. இதுகுறித்து காரைக்குடியை சேர்ந்த பானு கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆகஸ்ட் மாதம் தர்மராஜ் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.இதனிடையே, இந்த வழக்கை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் பானு மனுதாக்கல் செய்தார். அதனடிப்படையில் இந்த வழக்கை மதுரையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிந்து தர்மராஜ், வக்கீலை வீட்டில் இறக்கி விட நண்பருடன் காரில் சிவகங்கை வந்தார். வக்கீலை இறக்கி விட்டுவிட்டு சிவகங்கை வாரச்சந்தை ரோட்டில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு காரில் வந்த 6 பேர் கும்பல் திடீரென காரை வழிமறித்தனர். மற்றவர்களை தாக்கி இறக்கிவிட்டு தர்மராஜை மட்டும் காருடன் கடத்திச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.* ரூ.400 கோடி வரை மோசடியா?எஸ்பி செந்தில்குமார் கூறுகையில், ‘‘தர்மராஜ் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களில் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்று கூறி சுமார் ரூ.400 கோடி வரை வசூலித்துள்ளதாக தெரியவருகிறது.  விசாரணையில் தர்மராஜை கடத்திச் சென்றவர்கள் பயன்படுத்திய காரின் நம்பர் பிளேட்டுகள் போலியானவை என்றும், இவரிடம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் ஏற்கனவே ஒருமுறை இதுபோல் கடத்திச் சென்றுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. தர்மராஜை மீட்பதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்….

The post ரூ.1.68 கோடி மோசடி வழக்கில் கோர்ட்டில் ஆஜராகி விட்டுச் சென்ற நிதிநிறுவன அதிபர் காருடன் கடத்தல்: சிவகங்கையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Dharmaraj ,Sivagangai ,Tiruppur District, Udumalaipet ,
× RELATED சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை...