×

அடுத்தாண்டு தேர்தல் நடக்கும் நிலையில் ராஜஸ்தான் பாஜ.வில் தலைவர்கள் உட்பூசல்: முதல்வர் பதவிக்கு வசுந்தரா குறி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மொத்தம் உள்ள 200 இடங்களில் 108 இடங்களை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றியது. 71 இடங்களை வென்ற பாஜ எதிர்க்கட்சியாக உள்ளது. இந்நிலையில், இந்த மாநில பாஜவில் கட்சி தலைவர்களிடையே  கடும் கோஷ்டி பூசல் நிலவுகிறது.  மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத் ஆகியோர்  மாநில கட்சி தலைவர் பதவியை பிடிக்க கடும் முயற்சி செய்து வருகின்றனர்.  கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்றாலும் அதற்கு அடுத்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஜ மொத்தம் உள்ள 25 தொகுதிகளையும் வென்றது. ஆனால், கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற இடைதேர்தலில் பாஜ தோல்வியை தழுவியது.   தலைவர்களுக்கு இடையேயான மோதலால் தான் இடைதேர்தலில் தோல்வி ஏற்பட்டது என்று கட்சி நிர்வாகிகள் வெளிப்படையாக கருத்து தெரிவித்தனர். இதனால்  தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும்படி கட்சி தலைமையிடம் வசுந்தரா ராஜே  வலியுறுத்தி வருகிறார். கட்சியின் மாநில தலைவராக கஜேந்திர செகாவத்தை நியமிக்க கட்சி தலைமை பரிந்துரை செய்ததற்கு வசுந்தரா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.பாஜவின் அகில இந்திய துணை தலைவராக உள்ள வசுந்தரா ராஜே, மாநில அரசியலை குறிவைத்து  காய் நகர்த்தி வருகிறார். சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தின்போது பிரதமர் மோடியை வசுந்தரா சந்தித்து பேசினார். கட்சி தலைமையுடன் சமரசமாக செல்லும் விதமாக தான் அவர் மோடியை சந்தித்து பேசினார் என்று கூறப்படுகிறது. அதே போல் உபி, உத்தரகாண்ட் மாநிலங்களில் பாஜ முதல்வர்கள் பதவியேற்பு விழாவிலும் அவர் கலந்து கொண்டார்.  இந்நிலையில், கட்சியில் நிலவும் கோஷ்டி பூசலை முடிவுக்கு கொண்டு வருவதற்காக கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா, வசுந்தரா உள்பட ராஜஸ்தானை சேர்ந்த கட்சி தலைவர்களுடன் நேற்று முன்தினம் ரகசிய  ஆலோசனை நடத்தினார். அதில், ‘அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில்  கூட்டு தலைமை என்ற அடிப்படையில் கட்சி தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். யார் முதல்வர் வேட்பாளர் என்ற மோதலை தவிர்க்க வேண்டும்,’ என்று அவர் உத்தரவிட்டுள்ளார். …

The post அடுத்தாண்டு தேர்தல் நடக்கும் நிலையில் ராஜஸ்தான் பாஜ.வில் தலைவர்கள் உட்பூசல்: முதல்வர் பதவிக்கு வசுந்தரா குறி appeared first on Dinakaran.

Tags : Rajasthan BJP ,Vasundhara ,Chief Minister ,Jaipur ,Congress ,Rajasthan ,Ashok Khelat ,Dinakaran ,
× RELATED நீர்ப்பாசன திட்டத்திற்காக ₹50 கோடி...