×

கடந்த 5 மாதங்களில் மட்டும் கிண்டி கவர்னர் மாளிகையில் 20 அரிய வகை மான்கள் உயிரிழப்பு

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் இருக்கும் பூர்வீக புல்லுக்குப் பதிலாக அந்நிய வகை மெக்சிகன் புல்லைக் கொண்டு நட்சத்திர தோட்டம் செதுக்கப்பட்டது. இரண்டு திறந்த புல்வெளிகள் கொண்ட அந்த வளாகமானது மான்களின் வாழ்விடங்களில் ஒன்றாகும். இந்திய துணைக் கண்டத்தை தோன்றிடமாகக் கொண்ட பிளாக்பக்ஸ் எனப்படும் புல்வாய் மான்களுக்கு, அந்நிய வகை மெக்சிகன் புல் ஒவ்வாமையை கொடுக்கக் கூடியது. மேலும் அத்தகைய புல்வகைகளை மான்கள் தொடர்ந்து உட்கொண்டால் அதன் சந்ததிகளின் வளர்சிதை மாற்றத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: புல்வாய் மான்கள், புள்ளிமான்களை போலன்றி, தேர்ந்தெடுக்கப்பட்ட புல், மூலிகைகள் மற்றும் புதர்களை உண்ணும். பூர்வீக புல்லுக்கு பதிலாக மாற்று நிலத்தைச் சேர்ந்த புல் ரகங்களை கொண்டு வருவது மற்றும் திறந்தவெளி புல்வெளிகளை மோசமாக பராமரிப்பது போன்ற செயல்பாடுகள் புல்வாய் மான்களின் உயிர்வாழ்தலை கேள்விக்குறியாக்கும்.ராஜ்பவன் ஒரு காப்பு காட்டுக்குள் அமைந்துள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆகையால் அங்கு வாழ்ந்து வரும் வனவிலங்குகளின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். சமீபத்திய கணக்கெடுப்பின்படி, கிண்டி தேசிய பூங்கா மற்றும் ராஜ் பவன் வன வளாகத்தில் 77 புல்வாய் மான்கள் மட்டுமே உள்ளன.ராஜ்பவனில் உள்ள 30 ஏக்கர் போலோ மைதானம், இந்த  வளாகத்தில் கடைசியாக எஞ்சியிருக்கும் புல்வாய் மான்களின் வாழ்விடமாகும்.  ஆனால் அடர்த்தியான மற்றும் உயரமான தாவரங்களின் வளர்ச்சியின் காரணமாக அந்த  மைதானமும் மான்களுக்கு வாழத் தகுதியற்றதாகிவிட்டது. நட்சத்திரத் தோட்டம் மற்றும் போலோ மைதானத்தில் என்ன வகையான புல் பயன்படுத்தப்பட்டது மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து, கடந்த பிப்.15ம் தேதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சமீபத்திய மாதங்களில் இறந்த 20 புல்வாய் மான்களில் மூன்று, கடந்த டிசம்பரில் தாயால் கைவிடப்பட்ட குட்டிகள் என தெரியவந்தது. மேலும் அதன் பிரேத பரிசோதனையில் குட்டிகளின் வயிற்றில் எதுவும் இல்லை என்பதும் தெரியவந்தது.இதன்மூலம் கடந்த ஐந்து மாதங்களில், 20 அரியவகை மான்கள் இறந்துள்ளது உறுதியாகியுள்ளது. அவற்றில் பல பட்டினியால் இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் 2017 முதல் 2020 வரையிலான  இடைப்பட்ட காலத்தில் ராஜ்பவனில் 10 மான்கள் மட்டுமே இறந்துள்ளதாக வனத்துறை தரவுகள் காட்டுகின்றன.இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்….

The post கடந்த 5 மாதங்களில் மட்டும் கிண்டி கவர்னர் மாளிகையில் 20 அரிய வகை மான்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Raj Bavan ,Tamil Nadu ,Gindy Governor House ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...