×

கோயில் யானைகளை பார்க்கும்போது யானையை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் அதிகரிக்கும்-பாகன் பேட்டி

மேட்டுப்பாளையம் :  கோயில்களில் பராமரித்து வரும் யானைகளை நேரில் பார்க்கும் போது யானைகள் மீதான ஆர்வமும் அவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் அதிகரிக்கும் என்று திருச்சி ஸ்ரீ ரங்கம் கோவில் யானை ஆண்டாள் பாகன் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.மேட்டுப்பாளையத்தில் தமிழக கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் துவங்கி நடைபெற்று வருகிறது. 26 யானைகள் பங்கெடுத்து உள்ள இந்த முகாமில் பாண்டிச்சேரியை சேர்ந்த 2 யானைகள் கலந்து கொண்டுள்ளன. காலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி ஊட்டச் சத்தான உணவுகள் பசுந்தீவனம் தேவைப்படும் யானைகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான முக்கியமான கோயில்களில் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருச்சி  ரங்கம் கோவில் யானை ஆண்டாள் பாகன் ராஜேஷ் கூறுகையில், ‘‘கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். கோயில்களில் யானைகளை பராமரிப்பதால், மனிதர்களுக்கு யானைகள் மீதான அன்பும் அக்கறையும் அதிகரிக்கும். ஒரு காலத்தில் பெரிய கோயில் கட்டுவதற்கு யானைகள் மிகப்பெரிய அளவில் உதவி செய்துள்ளன. அதற்கு நன்றி செலுத்தும் விதமாகத்தான் யானைகளை நமது முன்னோர்கள் பராமரித்து வருகிறார்கள். தொடர்ந்து யானைகளை பார்த்து பழகி அதன் மீது அன்பு செலுத்தும்போது நிச்சயமாக காடுகளிலுள்ள யானைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் வரும்.புத்துணர்வு முகாமில் கலந்து கொள்வதன் மூலமாக யானைகளுடைய மனநிலையில் நல்ல மாற்றம் உள்ளது. ஒரு யானைக்கு வரக்கூடிய பிரச்னைகள் என்னென்ன? என்பது குறித்து தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பை இந்த முகாம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. சமச்சீர் உணவு கிடைப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பாகவும் இந்த யானைகள் புத்துணர்வு முகாம் அமைந்துள்ளது’’ என்று கூறினார்….

The post கோயில் யானைகளை பார்க்கும்போது யானையை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் அதிகரிக்கும்-பாகன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,
× RELATED மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே 4 நாளுக்கு பின்னர் மலை ரயில் சேவை துவங்கியது