×

போடிபாளையம் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா திரளான பக்தர்கள் குண்டம் இறங்கினர்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள போடிபாளையம் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பொள்ளாச்சி அருகே போடிபாளையம் குளத்தூரில் உள்ள ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா, கடந்த மார்ச் 4ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. பின் 8ம் தேதி முதல் பூவோடு நிகழ்ச்சி துவங்கி, தொடர்ந்து 10 நாட்கள் நடந்தது. கடந்த 15ம் தேதி முதல் மீன்குளத்தி பகவதியம்மன், குலசேகரபட்டிணம் முத்தாரம்மன், கன்னியாகுமரி பகவதியம்மன், மலைகோட்டை, கொடுமுடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அம்மன் கோயில்களில் இருந்து, பக்தர்கள் புனித தீர்த்தம் கொண்டு வந்தனர். நேற்று முன்தினம் மாலையில் குண்டம் திறப்பும், இரவு 9 மணிக்கு சிம்மவாகனத்தில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. பின் இரவு 10.30 மணியளவில் குண்டத்தில் அக்னி வளர்க்கப்பட்டது. அந்நேரத்தில் வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது.  திருவிழாவில் முக்கிய நிகழ்வான, பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில், விரதமிருந்து காப்புக்கட்டிய பக்தர்கள் பலர், பய பக்தியுடன் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள், ‘அம்மா தாயே’ என பக்தி கோஷம் எழுப்பினர். குண்டம் திருவிழாவை காண்பதற்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் குவிந்தனர். இதனால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. குண்டம் திருவிழாவில், திமுக மாநில நெசவாளர் அணி துணை தலைவர் தமிழ்மணி, ஊராட்சி தலைவர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இன்று (20ம் தேதி) மாலை 6 மணிக்கு பெண்கள் மாவிளக்கு வழிபாடும். நாளை (21ம் தேதி) மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது….

The post போடிபாளையம் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா திரளான பக்தர்கள் குண்டம் இறங்கினர் appeared first on Dinakaran.

Tags : Gundam ,Bodipalayam Badrakalliamman temple festival ,Pollachi ,Padrakalaiamman temple festival ,Podipalayam ,Kundam ,Bodipalayam Badrakalyamman Temple Festival ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...