×

புகார் கூறிய அடுத்த நிமிடத்தில் சாலை சீரமைப்பு: ஊராட்சி தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு

கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கம் ஊராட்சியில் புகார் கூறிய அடுத்த நிமிடத்தில் நடவடிக்கை எடுத்த, திமுக ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள 14வது வார்டு, ரேவதிபுரம், 5வது தெருவில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன. ஆனால், சாலை அமைக்கவில்லை. சாலை மற்றும் கால்வாய் வசதி இல்லாததால், தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து திறந்து விடப்படும் கழிவுநீர், சாலை முழுவதும் தேங்கி கடும் துர்நாற்றம் வீசியது. மேலும், கொசு தொல்லை அதிகரித்தது. சாலையில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், அப்பகுதி பொதுமக்கள், ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கார்த்தியிடம், நேரில் சென்று நேற்று புகார் கூறினர். இதையடுத்து, உடனடியாக பொக்லைன் இயந்திரம் மற்றும் துப்புரவு பணியாளர்களை வரவழைத்து, சாலையில் தேங்கிய கழிவுநீர் அகற்றப்பட்டது. பின்னர், பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையை சமன்படுத்தி சுத்தப்படுத்தப்பட்டது. மேலும், கழிவுநீர் திறந்துவிடப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விடுக்க வேண்டும். மீண்டும் கழிவுநீர் திறந்துவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும் என ஊராட்சி செயலருக்கு, ஊராட்சி தலைவர் பவானி கார்த்தி உத்தரவிட்டார். புகார் கூறிய அடுத்த நிமிடத்திலேயே, நடவடிக்கை எடுத்த ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்….

The post புகார் கூறிய அடுத்த நிமிடத்தில் சாலை சீரமைப்பு: ஊராட்சி தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Kuduvanchery ,DMK ,Urapakkam ,
× RELATED வண்டலூர் அருகே தனியார் குடியிருப்பு...