×

சென்ட்ரலில் ரயில்வே போலீசார் பறிமுதல் செய்த கஞ்சாவை கடத்தி விற்க முயன்ற 2 போலீசார், எஸ்ஐ மகன் கைது

சென்னை:  சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு அயனாவரம் திக்காகுளம் சாய்பாபா கோயில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்தின் பேரில், அங்கிருந்த ஒரு நபரை அழைத்து விசாரித்துள்ளனர். அதில், அவர், முகப்பேர் ஜே.ஜே.நகர் புகழேந்தி சாலையை சேர்ந்த திலீப்குமார் (39) என்பதும், இவர் ரியல் எஸ்டேட் வேலை செய்து வருவதும் தெரிந்தது. அவரிடம், ‘இந்த நேரத்தில் இங்கு எதற்காக நிற்கிறீர்கள்’, என போலீசார் கேட்டபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால், சந்தேகமடைந்து அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, அதில் ஒரு கிலோ கஞ்சா இருந்தது. இதனையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.இதுபற்றி போலீசார் கூறியதாவது: திலீப்குமாரின் தந்தை முத்துக்குமார் கடந்த 2016ம் ஆண்டு திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்தபோது மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார். இதையடுத்து, திலீப்குமாரின் தம்பி தண்டபாணிக்கு கருணை அடிப்படையில் போலீஸ் வேலை கிடைத்துள்ளது. அவர், தற்போது எழும்பூர் ரயில்வே கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். மேலும், ஓட்டேரி பனந்தோப்பு ரயில்வே காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரை பார்க்க திலீப்குமார் அடிக்கடி அங்கு வந்து சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியில் வசித்து வரும், சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் உதவி எழுத்தராக பணிபுரிந்து வரும் சக்திவேலுடன் (27), பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் மூலம் போலீஸ் கேம்ப் அலுவலகத்தில் வேலை செய்து வரும் செல்வகுமார் (30) பழக்கமாகி உள்ளார். கடந்த வாரம் செல்வகுமார், சக்திவேல் மற்றும் திலீப்குமார் ஆகிய 3 பேரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, சக்திவேல் மற்றும் செல்வகுமார், ‘‘எங்களிடம் கஞ்சா உள்ளது. அதை விற்றுத்தர முடியுமா,’’ என திலீப்குமாரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், ‘எனக்கு தெரிந்த வழக்கறிஞர் இருக்கிறார். அவர் மூலம் அதை விற்று தருகிறேன்’ என கூறியுள்ளார். இந்நிலையில், நேற்று திலீப்குமாருக்கு போன் செய்த செல்வகுமார், ‘சக்திவேலிடம் கஞ்சா உள்ளது. அதை வாங்கிக் கொண்டு, பணம் கொடுத்துவிடு’ என கூறியுள்ளார். அதன்பேரில், திலீப்குமார் ஓட்டேரி பனந்தோப்பு ரயில்வே காலனி வந்து, சக்திவேலிடம் இருந்த ஒரு கிலோ கஞ்சாவை பெற்றுக்கொண்டு, அதை தனக்கு தெரிந்த வழக்கறிஞரிடம் கொடுப்பதற்காக அயனாவரம் திக்காகுளம் சாய்பாபா கோயில் அருகே காத்திருந்ததும், அப்போது போலீசில் சிக்கியதும் தெரியவந்தது. தனிப்படை போலீசார் காவலர் சக்திவேல் மற்றும் செல்வகுமாரை பிடித்து விசாரித்தனர். அதில், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்டு, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை, ரயில்வே காவல் நிலையத்தில் உதவி எழுத்தராக பணிபுரிந்து வரும் சக்திவேல், திருட்டுத்தனமாக எடுத்து, அதை திலீப்குமாரிடம் கொடுத்து வெளியில் விற்கும்படி கூறியது தெரியவந்தது. இதையடுத்து காவலர்கள் சக்திவேல், செல்வகுமார் மற்றும் திலீப்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதில், தொடர்புடைய வழக்கறிஞர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட எஸ்ஐ மகன், 2 காவலர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

The post சென்ட்ரலில் ரயில்வே போலீசார் பறிமுதல் செய்த கஞ்சாவை கடத்தி விற்க முயன்ற 2 போலீசார், எஸ்ஐ மகன் கைது appeared first on Dinakaran.

Tags : Central ,Chennai ,Deputy Commissioner ,Karthigayan ,Ayanavaram Tikakulam Chayabha Temple ,Central, SI ,Dinakaran ,
× RELATED மத்திய சென்னை தொகுதியில் திமுக...