×

தென்மாவட்டங்களில் மீண்டும் களைகட்டும் புரவி எடுப்பு திருவிழா: விவசாயம் செழித்ததால் கிராமமக்கள் ஆர்வம்

சாயல்குடி: தொடர் வறட்சி, கொரோனா தடை போன்றவற்றால் கிராமங்களில் நடக்காமல் இருந்த புரவிஎடுப்பு விழா, இந்தாண்டு மீண்டும் களைகட்ட துவங்கியுள்ளது. தவழும் பிள்ளை, மண் குதிரை தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.தென்மாவட்ட கிராமங்களில் விவசாயம் செழிக்கவும், இறைவன் வழிபாடோடு சாதி, மத பேதமின்றி கிராமமக்கள் ஒற்றுமையாக கொண்டாடும் புரவி எடுப்பு திருவிழா மிகவும் பிரசித்திபெற்றது. ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போதிய பருவமழையின்றி தொடர்ந்து ஏற்பட்ட வறட்சியின் காரணமாக இத்திருவிழா நடத்துவது படிப்படியாக குறைந்தது. மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தொற்று தடை மற்றும் பரவல் அச்சம் காரணமாக முற்றிலும் நடக்காமல் இருந்தது.இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக நல்ல மழை பெய்து, விவசாயம் நன்றாக விளைந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தாண்டு புரவி எடுப்பு விழா களை கட்டி வருகிறது. இதற்காக மண்குதிரைகள், சாமி சிலைகள், தவழும் பிள்ளைகள், பாம்பு, நாய், காளை உள்ளிட்ட மண்ணால் செய்யப்படும் உருவங்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.இது குறித்து கடலாடி பூதங்குடி சண்முகசுந்தரம் கூறும்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் மூன்றாவது தலைமுறையாக இத்தொழில் செய்து வருகிறோம். மண்பானை, பனைமுட்டி, முட்டி, சமையல் மண் பாத்திரங்கள், கால்நடை தண்ணீர் தொட்டி, தானிய குலுமைகள், புரவி எடுப்பின் போது குதிரை, சாமி சிலைகள், தவழும்பிள்ளை போன்ற மண் பொம்மைகளை செய்து வருகிறோம். இதில் புரவி எடுப்பு மட்டும் விவசாயம், சமுதாய ஒற்றுமையுடன் இறை வழிபாடோடு தொடர்புடையது என்பதால் வருமானத்தை எதிர்பார்க்காமல் தொழில் செய்து வருகிறோம்.கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தொடர் வறட்சியின் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமங்களில் புரவி எடுப்பது குறைந்தது. கொரோனா காரணமாக 3 ஆண்டுகளாக முடங்கியது. இந்த நிலையில் 2 ஆண்டுகளாக விவசாயம் நன்றாக விளைந்தது. இதனால் இந்தாண்டு புரவி எடுப்பு நடத்துவதற்கு பல கிராமமக்கள் முடிவு செய்துள்ளனர். இந்த மாதம் கடலாடி பாதாள காளியம்மன் கோயில், ஆவணி மாதத்தில் மீனங்குடி, புரசங்குளம் போன்ற கிராமங்களில் நடக்க உள்ளது. இதனை போன்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடக்க உள்ளது.கிராம காவல் தெய்வமான அய்யனாரின் வாகனமாக உள்ள குதிரை, பேச்சியம்மன், ராக்காச்சியம்மன், கருப்பசாமி, வீரபத்திரன் உள்ளிட்ட காவல்தெய்வங்கள், நாகர், காளை, நாய் உள்ளிட்ட விவசாயிகளுக்கு உதவக்கூடிய சாமி வாகனங்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டோருக்காக கை, கால் உருவங்கள், குழந்தை பாக்கியத்திற்காக தவழும் பிள்ளை போன்ற மண் உருவங்கள் செய்யப்படுகிறது. இதற்காக வண்டல் மண், ஈரமான களிமண், ஆற்று மணல் ஆகிய 3 மணல் கலவையுடன், சிறுதானிய பயிரான கம்பு மாவு, நெல், சிறுதானியம் உமி ஆகியவற்றை பயன்படுத்தி உருவங்கள் செய்யப்படும். சுமார் ஒரு வாரம் நிழலில் காய வைத்து, செங்கல் சுடுவதை போன்று தீயில் இட்டு சுட்டு எடுக்கப்படும். பிறகு வெள்ளையடித்து, பெயிண்ட் அடித்து முழு வடிவம் கொடுக்கப்படும். கோயில் திருவிழாவிற்காக எடுத்துச்செல்லும் போது விவசாயிகள், விளைவிக்கப்பட்ட நெல், சிறுதானியங்களை உருவங்களின் காலில் கொட்டி, நன்றியுடன் வழிபாடு செய்து கோயில் வளாகத்தில் நேர்த்திக்கடனாக செலுத்தப்படும். ரசாயனம் ஏதுமின்றி இயற்கை முறையில் செய்வதால், சில ஆண்டுகளுக்குள் மழையில் கரைந்து மண்ணோடு மண்ணாக கலந்து விடும் என்றார்….

The post தென்மாவட்டங்களில் மீண்டும் களைகட்டும் புரவி எடுப்பு திருவிழா: விவசாயம் செழித்ததால் கிராமமக்கள் ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Puravi picking festival ,southern ,Chayalgudi ,weeding festival ,corona ,Dinakaran ,
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!