×

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 20 கிராமங்களில் முயல்வேட்டை திருவிழா

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் தமிழ் வருடப்பிறப்பான ஏப்ரல் 14ம் தேதி முதல் தொடர்ச்சியாக 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொன்று தொட்டு முயல்வேட்டைத் திருவிழா நடந்து வருவது வழக்கம். இதற்காக சம்பந்தப்பட்ட கிராமத்திலிருந்து இளைஞர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட ஆண்கள் கூட்டமாக தடிகள் மற்றும் வளர்ப்பு நாய்களுடன் ஊருக்கு அருகேயுள்ள மலையடிவாரப் பகுதி, காடுகள், ஏரிகள், கரடு முரடான மண்மேடுகள், புதர்கள் உள்ளிட்டஇடங்களில் தங்கியுள்ள முயல்களை துரத்தி அடித்துப் பிடித்து வேட்டையாடுவார்கள். பிடிபட்ட முயல்களை ஊருக்குக் கொண்டுவந்து, அதனைத் தோரணமாகக் கட்டித் தொங்கவிட்டு மேளதாளத்துடன் ஆடல், பாடல் கும்மாளத்துடன் ஊர்வலமாக ஊரைச்சுற்றி எடுத்து வருவர். பிறகு சாமிக்குப் படையல் இட்டு, சிறுசிறு துண்டுகளாக பிரித்து சரிசமமாக அனைத்து குடும்பத்தாருக்கும் பங்கிட்டுகொடுத்து சமைத்து சாப்பிடுவது வழக்கம். இந்த முயல் வேட்டைக்காக வீட்டுக்கு ஒருவரேனும் தவறாமல் பங்கு பெற அழைப்பு விடுக்கப்பட்டு நூற்றுக்கு மேற்பட்டோர் இந்த முயல் வேட்டையில் பங்குபெறுவது பாரம்பரிய வழக்கம்.இதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் குரும்பலூர், லாடபுரம், அம்மாப்பாளையம், களரம்பட்டி, சத்திரமனை கீழக்கணவாய், துறைமங்கலம், எளம்பலூர்,சிறுவாச்சூர், அரணாரை, செஞ்சேரி, மேலப்புலியூர், நாவலூர், தம்பிரான்பட்டி, பாடாலூர், பாளையம், தெரணி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த முயல்வேட்டைத் திருவிழா நேற்று நடைபெற்றது. காவல்துறை, வனத்துறை முயல் வேட்டைத் திருவிழா நடத்த அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது….

The post பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 20 கிராமங்களில் முயல்வேட்டை திருவிழா appeared first on Dinakaran.

Tags : Rabbit hunting festival in ,Perambalur district ,Perambalur ,Rabbit hunting festival ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி