×

சின்ன மம்மியை சூடாக்கிய சேலம் விவிஐபியின் போட்டோ ஷுட் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘ஒத்தை வரியை கேட்டு குஷியாகி போன விவிஐபி யாரு… அப்படி அவரு என்ன செய்துட்டாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘சின்னமம்மி ஆன்மீக பயணமுன்னு மாங்கனி மாவட்டம் புறப்பட்ட நேரத்துல, பொதுச் செயலாளர் பதவியில இருந்து சின்னமம்மிய நீக்குனது செல்லுமுன்னு சென்னையில் இருந்து ஒத்தை வரியில சேலம் விவிஐபிக்கு தகவல் கிடைச்சதாம். நாமாக பார்த்து தமிழகத்தின் முதல் நபர் என்ற பதவி கொடுத்து அழகு பார்த்த அந்த அன்பு சகோதரன் ஊருக்கு போகும்போதா இப்படியா நடக்கணும் என்று ரொம்பவே வருத்தப்பட்டாங்களாம் சின்னமம்மி. ஆனா பாருங்க, சேலம் விவிஐயும் அன்பு சகோதரர் ரொம்பவுமே குஷியாகிட்டாராம். வழக்கமாக மேல்மட்ட நிர்வாகிகளை போர்டிகோவில் பார்த்துட்டு வீட்டுக்கு உள்ளே போயிடுவாராம். ஆனா, சென்னையில இருந்து சின்ன மம்மி பற்றி வந்த ஒத்தை வரியை கேட்ட பிறகு, மாங்கனி மாவட்டத்துக்கு வந்த சேலம் விவிஐபி, ஒரு போட்டோ ஷூட்டே நடத்திட்டாராம். வீட்டுக்கு போன கடைக்கோடி தொண்டர்களை எல்லாம் தனித்தனியா தன்கூட நிக்கவச்சி, போட்டோ எடுத்துக்கிட்டதோடு மட்டுமல்லாம ரொம்பவே சிரிச்சாராம். நம்மையும் மதிச்சு போட்டோ எடுத்துக்கிட்டாரே நம் தலைவர், இனி அவர் உச்சத்துக்கு போவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாதுன்னு மாஜியின் ஆதரவாளர்கள், அவரது காதுபடவே சொன்னாங்களாம். இந்த சந்தோஷத்த கொண்டாடும் வகையில், நசியனூரில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கும் குடும்பத்தோட விசிட் அடித்தாராம். இந்த செய்தி அப்படியே சின்ன மம்மிக்கு பாஸ் ஆச்சு.. இதை கேட்டதும் மூட் அப்செட் ஆகிவிட்டு, யோசிக்க தொடங்கிவிட்டாராம் சின்ன மம்மி என்றார்…’’ விக்கியானந்தா.‘‘கர்ப்பிணி அட்டைக்கு அப்படி என்ன டிமாண்ட் என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘வெயிலூர் மாவட்டம் அணை தாலுகாவுல, ஊசூரு கவர்மெண்ட் ஆரம்ப சுகாதார நிலையம் இருக்குது. இந்த சுகாதார நிலையத்துல பணிபுரியுறதுக்கு, கிராமப்புற செவிலியருங்கல நியமிச்சிருக்காங்க. இவங்க, அந்த ஏரியாவுல இருக்குற கர்ப்பிணிகளுக்கு எந்த தகவலையும் சரியாக சொல்றதில்லையாம். அதோட, வெளியூரைச் சேர்ந்த கர்ப்பிணிங்க, இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு போனா, அவங்களோட விவரங்களையும் சரியாக பதிவு செய்றதில்லையாம்.சம்திங் கொடுத்தாத்தான், சரியாக பதிவு செய்து கர்ப்பணிகளுக்கான அட்டைய கொடுக்குறாங்களாம். சுகாதார நிலையத்துல சிகிச்சைக்கு போன அவங்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க பரிந்துரைக்குறதில்லையாம். இதுல, ஒரு நர்ஸ், கடந்த மாசம் வெளியூரை சேர்ந்த கர்ப்பிணிக்கு பதிவு அட்டை வழங்காமலும் கர்ப்ப காலம் மற்றும் குழந்தை பெற்றதும் கிடைக்கும் உதவிதொகைக்கு பரிந்துரை செய்யாம அலைக்கழிச்சிருக்காங்க. பாதிக்கப்பட்ட அந்த பெண், மாவட்ட சுகாதார துறை அதிகாரிகிட்ட புகார் சொல்லியிருக்காங்க. அவரும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கலையாம். கேட்க ஆளில்லாம நர்ஸ்களோட ஆட்டம் ஓவராக இருக்குதாம். இதனால் மலை கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணிகள் ரொம்ப அவஸ்தப்படுறாங்க. இவங்களால, 2 குழந்தைகள் பிறந்தும், கர்ப்பகால உதவித்தொகை கிடைக்கலைன்னு கிராமத்துல இருந்து புகார்கள் வரத்தொடங்கியிருக்குது. கர்ப்பிணிகள் விஷயத்துல விளையாடுற நர்ஸ்கள் மீதும், அந்த அதிகாரிங்க மீது நடவடிக்கை எடுக்கணும்னு மக்கள் எதிர்ப்பார்க்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ கட்சியில இருக்கிறது சில பேரு தான்… இவங்களுக்குள்ளும் கோஷ்டி பூசலா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தோல்விக்கு பிறகு தாமரை கட்சியின் மாவட்ட தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். மன்னர் மாவட்டத்தில் மன்னர் ெபயரை கொண்டவர் அதிரடியாக மாற்றப்பட்டார். புதிதாக, ‘நான்கு எழுத்து’ பெயரை கொண்டவர் நியமிக்கப்பட்டார். மன்னர் பெயரை கொண்டவருக்கும், புதிதாக நியமிக்கப்பட்டவருக்கும் இடையே உச்சகட்ட பனிப்போராம். இருவருக்கும் இடையே மறைமுகமாக இருந்து வந்த பனிப்போர் தற்போது தொண்டர்கள் மத்தியிலே நேரடியாகவே மோதிக்கொள்ளும் நிலையில் இருக்காம். இவங்கள நம்பி கட்சியில் இருந்தால், நிர்வாகிகளுக்குள்ளே இருக்கும் ஈகோ பிரச்னையால் பலிகாடா ஆவுது நம்மதான் என தொண்டர்கள் புலம்புகிறாங்க. இந்த மோதல் விவகாரத்த ஆரம்பத்தில் மாநில தலைமை கண்டுகொள்ளவில்லையாம். தற்போது உள்ள மன்னர் மாவட்ட தலைவர் தனக்கு வேண்டிய ‘சோர்ஸ்’ மூலம் கோஷ்டி மோதல் விவகாரத்தை டெல்லிக்கு எடுத்து சென்றுள்ளாராம். இதனால் மன்னர் மாவட்டத்தில் கூண்டோடு நிர்வாகிகள் மாற்றம் இருக்கலாம் என இந்த டாப்பிக் தான் தொண்டர்கள் மத்தியில் ஓடுகிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘முட்டை மாவட்ட  முன்னாள் பெண் அமைச்சர் ஒருவர் தலைமறைவாக உள்ளாராமே’’ ‘‘அவர் முட்டை துறை அமைச்சராக  இருந்தபோது  அரசு வேலை  கொடுப்பதாக தனது உறவினர் மூலம் வசூல் வேட்டை நடத்தினார். ஆனால் சொன்னபடி அரசு வேலை  கொடுக்கவில்லை. ஆட்சி மாறிய பிறகு பணத்தையும் செட்டில் செய்யவில்லை. பணம் வசூல் செய்து கொடுத்த நெருங்கிய உறவினர் ரமேஷ்பாபு கைது செய்யப்பட்டார். புகார் கொடுத்த ஒருவர் இறந்து விட்டார். இதன் காரணமாக எக்ஸ் தலைமைறைவு  வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இலை கட்சி நிகழ்ச்சி, தனது கல்லூரி நிகழ்ச்சி, தன் குடும்ப நிகழ்ச்சிகள் எதுலையும்  பங்கேற்காமல் தவிர்த்து வருகிறாராம். இதற்கு பின்புலமாக முன்னாள் அமைச்சர் பவரான பெல் உள்ளதாக கட்சியினர் கருதுகின்றனர். இதை வைத்து அவரை அரசியலில் இருந்து ஓரம் கட்டி வருகிறாராம்’’ என்றார் விக்கியானந்தா. …

The post சின்ன மம்மியை சூடாக்கிய சேலம் விவிஐபியின் போட்டோ ஷுட் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Salem VVIP ,Yananda ,VVIP ,Peter ,Chinnammammi ,Chinna Mammy ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...